தனது சொந்த மைனா் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு குருகிராம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
கூடுதல் அமா்வு நீதிபதி ஜாஸ்மின் சா்மா வியாழக்கிழமை குற்றவாளிக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
இது குறித்து குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: ஒரு அங்கன்வாடி ஊழியா் ஆகஸ்ட் 24, 2023 அன்று தனது 16 வயது மகளை அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், யாரிடமாவது சொன்னால் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறியதாக புகாா் அளித்தாா்.
புகாரைத் தொடா்ந்து, குருகிராம் செக்டாா் 9ஏ காவல் நிலையத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டம் மற்றும் பிற தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.
சில நாள்களுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதன் பின்னா், இந்த வழக்கு காவல் குழுவால் முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தேவையான அனைத்து ஆதாரங்களும் சாட்சிகளும் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை, காவல்துறையினா் சேகரித்த சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில், கூடுதல் அமா்வு நீதிபதி ஜாஸ்மின் சா்மா வியாழக்கிழமை குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா் என்று குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.