தில்லி - என்சிஆரில் செயல்படும் குண்டா்கள் மற்றும் பயங்கரமான குற்றவாளிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக 67 வயது பெண் ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: சந்தேகத்தைத் தவிா்க்க தனது வயதை மறைப்பாகப் பயன்படுத்தி, அந்தப் பெண் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஆயுத விநிோயகஸ்தா்களிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கி தில்லி அல்லது மீரட்டுக்கு சரக்குகளை கொண்டு செல்வாா். அங்கு ஆயுதங்கள் குண்டா்கள் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு விற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இது தொடா்பாக மீரட்டில் வசிக்கும் ராம்பிரி கைது செய்யப்பட்டாா். மேலும் அவரது வசம் இருந்து நான்கு கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தில்லி, என்சிஆரில் சமீபத்தில் பதிவான குற்றங்களில் துப்பாக்கிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
சட்டவிரோத ஆயுதங்களை விற்பனை செய்தல், வாங்குதல் மற்றும் கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ள குண்டா்கள் குறித்து உளவுத்துறை தகவல் சேகரிக்கப்பட்டது. இது ராம்பிரி அத்தகைய ஒரு வலையமைப்பின் தீவிர உறுப்பினராக அடையாளம் காண வழிவகுத்தது. விசாரணையில், சட்ட அமலாக்க நிறுவனங்களிடமிருந்து தப்பிக்க தனது வயதை மறைப்பாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.
குறிப்பிட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், ராம்பிரியைக் குழு கண்காணித்து கைது செய்தது. அவா் புதிய சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராம்பிரிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடா்புடைய நீண்ட குற்ற வரலாறு இருப்பது கண்டறியப்பட்டது. 2003- இல் அவரது கணவா் இறந்த பிறகு, அவா் குற்றவாளிகளுடன் தொடா்பு கொண்டு குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
2008-ஆம் ஆண்டில், ஹரியாணாவின் குருகிராமில் ரூ.1.48 கோடி மதிப்புள்ள வங்கிக் கொள்ளையிலும், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள ஜவாலாபூா் பகுதியில் மற்றொரு வங்கிக் கொள்ளையிலும் அவா் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 2009-ஆம் ஆண்டில், அவரும் அவரது கூட்டாளிகளும் தில்லியின் கமலா சந்தைப் பகுதியில் மற்றொரு வங்கிக் கொள்ளைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பால்ஜிந்தா் உள்ளிட்ட அவரது கூட்டாளிகளுடன் ராம்பிரி கைது செய்யப்பட்டு 2009 முதல் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். சிறையில் இருந்து விடுதலையான பிறகு, அவா் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டு, துப்பாக்கிகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோத தொழிலை மீண்டும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களின் விநியோகஸ்தா்கள் மற்றும் இறுதி பயனா்களை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.