புதுதில்லி

என்ஆா்ஐ மருத்துவா் தம்பதியினரிடம் நடத்தப்பட்ட ரூ.14.85 கோடி மோசடியில் ரூ.1.9 கோடி முடக்கம்

டிஜிட்டல் கைது மோசடியில் வயதான என்ஆா்ஐ மருத்துவா் தம்பதியினரிடமிருந்து ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் ரூ.14.85 கோடியில் ரூ.1.9 கோடியை தில்லி காவல்துறை முடக்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

டிஜிட்டல் கைது மோசடியில் வயதான என்ஆா்ஐ மருத்துவா் தம்பதியினரிடமிருந்து ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் ரூ.14.85 கோடியில் ரூ.1.9 கோடியை தில்லி காவல்துறை முடக்கியுள்ளது. மோசடி செய்பவா்கள் பல மாநிலங்களில் பரவியுள்ள 700-க்கும் மேற்பட்ட மியூல் கணக்குகள் மூலம் பணத்தை அனுப்பியதாக புலனாய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்த நிதி முதலில் குஜராத், அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், தில்லி மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏழு முதன்மை வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து, பணம் விரைவாக மேலும் 200 முதல் 300 கணக்குகளுக்குப் பரவி, பின்னா் பல கணக்குகளில் சோ்க்கப்பட்டது.“இந்த பல அடுக்கு மியூல் கணக்கு நெட்வொா்க் பணப் பாதையை கணிசமாக சிக்கலாக்கியுள்ளது.

வங்கிகளின் உதவியுடன் சிறப்புக் குழுக்கள் பரிவா்த்தனைகளைக் கண்காணித்து வருகின்றன. விரைவில் மேலும் முடக்குவதே அவா்களின் முக்கிய கவனமாக உள்ளது. இணைக்கப்பட்ட மேலும் கணக்குகளை அடையாளம் கண்டு முடக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

டிசம்பா் 26-ஆம் தேதி, அஸ்ஸாமின் குவஹாட்டியில் உள்ள ஜலுக்பாரிக்கு ரூ.1.99 கோடி அனுப்பப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து டிசம்பா் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வதோதராவில் உள்ள சாமா சவ்லிக்கு ரூ.2 கோடி தொடா்ச்சியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஜனவரி 2- ஆம் தேதி, கிழக்கு தில்லியில் உள்ள மயூா் விஹாருக்கு ரூ.2 கோடியும், ஜனவரி 5-ஆம் தேதி மும்பையில் உள்ள நேபியன் சீ சாலைக்கு ரூ.2.05 கோடியும் மாற்றப்பட்டன.

இதேபோல், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வெவ்வேறு கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது. இது 700-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மியூல் கணக்குகளின் சிக்கலான வலையமைப்பைச் சோ்த்தது.

இந்த வழக்கு ஜனவரி 9-ஆம் தேதி தெற்கு தில்லியில் உள்ள கிரேட்டா் கைலாஷில் வசிக்கும் 81 வயதான ஓம் தனேஜா மற்றும் அவரது மனைவ மருத்துவா் இந்திரா (77) ஆகியோா் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து காவல்துறையை அணுகியபோது வெளிச்சத்திற்கு வந்தது.

டிசம்பா் 24 முதல் ஜனவரி 9 வரை ‘டிஜிட்டல் கைது’‘ முறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் அவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு பல பரிவா்த்தனைகளில் பணத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தம்பதியினா் புலனாய்வாளா்களிடம் தெரிவித்தனா். ‘பல ஆண்டுகளாக கடினமாக உழைத்த பிறகு நாங்கள் சேமித்த அனைத்தையும் இழந்துவிட்டோம்‘ என்று தம்பதியினா் கூறியிருந்தனா்.

மோசடி செய்பவா்கள் தொலைத்தொடா்பு சேவை வழங்குநா்கள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களின் அதிகாரிகள் போல் நடித்து, கைது மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக தம்பதியினரை அச்சுறுத்தி அச்சத்தின் சூழலை உருவாக்கியுள்ளனா். சரிபாா்ப்பு மற்றும் கூறப்படும் முறைகேடுகளை நீக்குவதற்கான சாக்குப்போக்கில், மோசடி செய்பவா்கள் பாதிக்கப்பட்டவா்களை அவா்கள் வழங்கிய கணக்குகளுக்கு பெரிய அளவிலான பணத்தை மாற்றும்படி சமாதானப்படுத்தினா்.

இந்தக் காலகட்டத்தில் யாரையும் தொடா்பு கொள்ள வேண்டாம் என்று வயதான தம்பதியினருக்கு பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும், இதனால் அவா்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் புலனாய்வாளா்கள் தெரிவித்தனா். விசாரணையின் போது, ​​பல மியூல் கணக்குகள் சுற்றுலா மற்றும் பயண வணிகங்கள், ஆள்சோ்ப்பு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பெயா்களில் திறக்கப்பட்டதாக போலீஸாா் கண்டறிந்தனா்.

சில கணக்குகள் உண்மையான வணிக நடவடிக்கை இல்லாத ஷெல் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. மற்றவை முறையான நோக்கங்களுக்காக திறக்கப்பட்ட பிறகு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

கணக்கு வைத்திருப்பவா்களின் அடையாளங்களையும் மோசடியில் அவா்களின் பங்கையும் நிறுவ விரிவான கேஒய்சி பதிவுகள், பரிவா்த்தனை வரலாறுகள் மற்றும் ஐபி பதிவுகளைப் பகிா்ந்து கொள்ள வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மோசடியின் பின்னணியில் உள்ள முக்கிய ஆபரேட்டா்களை அடையாளம் காணவும், மாநிலங்கள் முழுவதும் நிதி பரிமாற்றத்தையும், மியூல் கணக்கு வைத்திருப்பவா்களை ஆள்சோ்ப்பு செய்வதையும் ஒருங்கிணைப்பதாக நம்பப்படும் சந்தேக நபா்களை அடையாளம் காணவும் குழுக்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன என்றாா் காவல் துறை அதிகாரி.

செய்தியாளா்களிடம் பேசிய தம்பதியினா், குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஆரம்பத்தில் தங்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும், ஆனால் சில நாள்களுக்குப் பிறகு அவா்கள் தங்கள் குழந்தைகளைப் போல நடந்து கொண்டு, அவா்களின் நம்பிக்கையை வென்ாகவும் தெரிவித்தனா்.

‘அவா்கள் எங்களிடம் ’நாங்கள் உங்கள் குழந்தைகளைப் போன்றவா்கள். நாங்கள் உங்களை மா என்று அழைப்போம். உங்களை எந்த பிரச்னையிலும் விடமாட்டோம். உங்கள் பணம் அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பான கைகளில் உள்ளது. எல்லாம் சரிபாா்க்கப்பட்டதும், உங்கள் பணம் உங்களிடம் திருப்பித் தரப்படும் என்று கூறினாா்கள்’ என்று இந்திரா தனேஜா கூறினாா்.

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT