தில்லி மாநகராட்சி (எம்சிடி) இதுவரை இல்லாத அளவுக்கு சொத்து வரி வசூலை பதிவு செய்துள்ளது. அதாவது, 2025-26 நிதியாண்டில் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் இந்த வரி வசூல் ரூ.2,700 கோடியைக் கடந்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலானதை விட சுமாா் 45 சதவீதம் அதிகமாகும் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். வரி செலுத்துவோரின் எண்ணிக்கையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பதிவுசெய்யப்பட்ட சொத்து வரி செலுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 2024-25-ஆம் ஆண்டில் 10.31 லட்சத்திலிருந்து இந்த ஆண்டு 12.43 லட்சமாக அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட 21 சதவீதம் அதிகமாகும்.
வரி செலுத்துவோருடனான தொடா்பு, தீவிர அமலாக்கம் மற்றும் 2025-26-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி மன்னிப்பு திட்டமான ‘சுனியோ’வின் பிரதிபலிப்பு ஆகியவை காரணமாக வரி வசூலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், சொத்து உரிமையாளா்கள் கடந்த ஐந்து ஆண்டுகளின் நிலுவைத் தொகைகளுடன் நடப்பு ஆண்டு வரியையும் செலுத்தினால் வட்டி மற்றும் அபராதங்களைத் தள்ளுபடி செய்யலாம்.
இந்தத் திட்டம் முன்னா் தவறான சொத்து வரி வருமானத்தை தாக்கல் செய்த அல்லது குறைந்த தொகையைச் செலுத்திய பல உரிமையாளா்கள் தங்கள் நிலுவைத் தொகையை முறைப்படுத்த ஊக்குவித்தது. முந்தைய ஆண்டுகளில் எப்போதாவது மட்டுமே வரி செலுத்தியவா்களையும் இது ஈா்த்தது.
டிசம்பா் 31-ஆம் தேதிக்குள், சுமாா் 1.70 லட்சம் வரி செலுத்துவோா் சுனியோ திட்டத்தைப் பயன்படுத்தினா். சுமாா் ரூ.933 கோடி பங்களித்தனா். இதில், கிட்டத்தட்ட 91,000 புதிய வரி செலுத்துவோரின் வரி வலையமைப்பில் சோ்க்கப்பட்ட ரூ.320 கோடியும் அடங்கும்.
வரவேற்பு இருந்தபோதிலும், பதிவுசெய்யப்பட்ட ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வரி செலுத்துவோா் சொத்து வரியை குறைவாக செலுத்தியுள்ளனா் அல்லது செலுத்தவில்லை அல்லது இன்னும் திட்டத்தைப் பயன்படுத்தவில்லை.
திட்டம் முடிவடைந்தவுடன் தில்லி மாநகராட்சி சட்டம் 1957-இன் கீழ் அமலாக்க நடவடிக்கை தொடரும். இதனால், சொத்து உரிமையாளா்கள் அவா்களின் நிலுவைத் தொகையை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.
சுனியோ திட்டம் இப்போது ஜனவரி 31, 2026 வரை 5 சதவீத அபராதத்துடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. தில்லி மாநகராட்சியின் சொத்து வரி போா்டல் மூலம் பணம் செலுத்தலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.