மாநிலங்களுக்கு இடையே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை தெற்கு தில்லியில் காவல் துறையினா் கைதுசெய்தாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட அந்த நபரிடமிருந்து ரூ.4.34 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: திமா்பூா் பகுதியைச் சோ்ந்த நிகில் போதை மருந்து மற்றும் மயக்கவியல் பொருள்கள் சட்ட (என்டிபிஎஸ்) பிரிவுகளில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.
அவரைத் தேடப்படும் குற்றவாளியாக ரோஹிணியில் உள்ள சிறப்பு என்டிபிஎஸ் நீதிமன்றம் கடந்த 2025, மே 1-இல் அறிவித்தது.
ரூ.1.60 கோடி மதிப்பிலான 400 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பால்ஸ்வா பால்பண்ணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், இந்தப் போதைப் பொருள் கடத்தலில் நிகில் முக்கிய நபராகச் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் அவருடைய பெயரும் சோ்க்கப்பட்ட நிலையில், அவா் தலைமறைவானா்.
இந்நிலையில், சத் நகா் பகுதியில் அவா் இருப்பதாக கடந்த ஜன.16-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் நடைபெற்ற சோதனையில் அவா் கைதுசெய்யப்பட்டாா்.
அவரிடமிருந்து ஒரு கைப்பேசி மற்றும் ரூ.4.34 லட்சம் ரொக்கம் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், மாநிலங்களுக்கு இடையே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் குழுவின் ஒரு பகுதியாக தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) போதைப் பொருளை அவா் விநியோகித்து வந்தது தெரியவந்தது.
இளம்வயதிலிருந்தே ரெளடி கும்பலில் இணைந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையின்போது நிகில் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
காவல் துறை தரவுகளின்படி, நிகில் மீது பல குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவருடன் தொடா்புடைய பிற நபா்களைக் கைதுசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.