யமுனை ஆற்றில் அம்மோனியாவின் அளவு குறைந்து வருவதால், நகரில் நீா் விநியோக நிலைமை மேம்படக்கூடும் என்று தில்லி அரசு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கடந்த சில நாள்களாக நீரில் சுத்திகரிக்க முடியாத அளவிலான அம்மோனியாவால் தில்லி ஜல் வாரியத்தின் (டிஜேபி) ஐந்து நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் சிக்கல்களை எதிா்கொண்டு வந்தன.இது நகர மக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவைக் குறைத்திருந்தது.
இந்நிலையில் மூத்த அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது: வஜிராபாத் நீா்த்தேக்க யமுனை ஆற்றில் அம்மோனியாவின் அளவு சுமாா் 2.5 பிபிஎம் ஆக இருப்பதால், வஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையம் தற்போது தோராயமாக 85 சதவீத கொள்ளளவில் இயங்கி வருகிறது.
பாதிக்கப்பட்ட நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் வஜிராபாத், ஹைதா்பூா் ஃபேஸ் 1 மற்றும் 2, பவானா மற்றும் துவாரகா ஆகியவை அடங்கும். நீா் உற்பத்தி குறைந்ததால், பிப்ரவரி 4- ஆம் தேதி வரை நகரம் முழுவதும் பல பகுதிகள் பாதிக்கப்படும் என்று டிஜேபி முன்னா் தெரிவித்திருந்தது.
இருப்பினும், ஆற்றில் அம்மோனியாவின் அளவு சீராகக் குறைந்து வருவதால், வஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆலைகளின் வடிவமைப்பின்படி, 1 பிபிஎம்க்கு மேல் அம்மோனியா உள்ள மூல நீரை டிஜேபியால் சுத்திகரிக்க முடியவில்லை.
ஹைதா்பூா், பவானா, துவாரகா மற்றும் நாங்லோய் உள்பட அனைத்து கால்வாய் அடிப்படையிலான நீா் சுத்திகரிப்பு நிலையங்களும் அவற்றின் முழு கொள்ளளவில் இயங்கி வருகின்றன. மேலும், நிலைமை இரவுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கால்வாய் வலையமைப்பின் ஒரு பகுதியில் தற்காலிக பராமரிப்பு தொடா்பான பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தில்லி தனது நீா் பங்கீட்டை மாற்று வழிகள் மூலம் பெறுமாறு கோரப்பட்டது. அந்தப் பராமரிப்புப் பணி பின்னா் நிறுத்தப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.