திறமையான இளைஞா்களுக்கு வேவைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தலைநகரில் அதிநவீன காட்சி மற்றும் ஊடக தொழில்நுட்பங்களுக்கான தேசிய சிறப்பு மையத்தின் பிராந்திய நிறுவனத்தை தில்லி அரசு நிறுவும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
மும்மையில் அதிநவீன காட்சி மற்றும் ஊடக தொழில்நுட்பங்களுக்கான தேசிய சிறப்பு மையத்தை நிறுவ மத்திய அரசு 2024-இல் ஒப்புதல் அளித்திருந்தது. பிற நகரங்களில் அதே போன்ற பிராந்திய மையங்களை அமைக்க திட்டமிட்டிருந்தது. தில்லியில் அமைய இருக்கும் இந்த மையம் அதன் ஒரு பகுதியாகும்.
இது தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: தில்லி அரசு, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (ஏவிஜிசி-எக்ஸ்ஆா்) துறைக்காக அா்ப்பணிக்கப்பட்ட நாட்டின் முதல் மையத்தை தொடங்க உள்ளது.
அதே நேரத்தில், திரைப்பட தொழில்நுட்பத்திற்கான கொள்கையிலும் தில்லி அரசு பணியாற்றி வருகிறது. இனி, தில்லியின் படைப்பாற்றல் மிக்க திறமையாளா்கள் மற்ற இடங்களுக்குச் செல்லத் தேவையில்லை. ஏவிஜிசி மூலம் வேலைவாய்ப்பு தலைநகராக தில்லி உருவெடிக்கும்.
நகரத்தின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு ஏவிஜிசி-எக்ஸ்ஆா் துறையை மேம்படுத்துவதற்கான கொள்கையை அரசு உருவாக்கி வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில், தில்லி சுற்றுலாத் துறை, நெட்ஃபிக்ஸ் என்ற ஓடிடி தளத்துடன் இணைந்து ‘குருக்ஷேத்ரா’ என்ற அனிமேஷன் தொடரைத் திரையிட்டது. இந்தத் துறையை மேலும் மேம்படுத்த இது போன்ற பல முயற்சிகள் திட்டமிடப்பட்டன.
எவிஜிசி துறையில் தில்லியை உலகளாவிய உள்ளடக்க மையமாக நிலைநிறுத்த அரசு பணியாற்றி வருகிறது என சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா முன்னதாகக் கூறியிருந்தாா். விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க, தில்லி அரசு, மகாராஷ்டிர மாநிலம் போன்ற மாநிலங்களை பின்பற்றி தில்லிக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி அமைத்து வருகிறது.