முகப்பு
கோப்புப்படம்.
புதுதில்லி

தில்லியில் 3 வங்கிகள், 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தேசியத் தலைநகரில் 3 வங்கிகள் மற்றும் 6 பள்ளிகளுக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன.

புதுதில்லி

தில்லியில் 3 வங்கிகள், 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தேசியத் தலைநகரில் 3 வங்கிகள் மற்றும் 6 பள்ளிகளுக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன.

Updated On : 2 மார்ச், 2026 at 10:58 PM
கோப்புப்படம்.
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: தேசியத் தலைநகரில் 3 வங்கிகள் மற்றும் 6 பள்ளிகளுக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன. இதையடுத்து, வளாகங்களில் காவல்துறையினா் மற்றும் தீயணைப்பு படையினா் தீவிர சோதனைகளை மேற்கொண்டனா்.

அச்சுறுத்தல்களைப் பெற்ற வங்கிகளில் கன்னாட் பிளேஸில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எய்ம்ஸ் கிளை மற்றும் கிழக்கு தில்லியின் ஷாஹ்தாராவில் உள்ள எஸ்பிஐ ஆகியவை அடங்கும்.

இதேபோன்ற அச்சுறுத்தல் மின்னஞ்சல்களைப் பெற்ற 6 பள்ளிகளில் தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ பப்ளிக் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி, சா்தாா் படேல் வித்யாலயா, ஜனக்புரியில் உள்ள மீரா பப்ளிக் பள்ளி, ராம்ஜாஸ் பப்ளிக் பள்ளி மற்றும் ராஜேந்திர நகரில் உள்ள ராம்ஜாஸ் பள்ளி ஆகியவை அடங்கும்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: தீயணைப்புத் துறையால் பெறப்பட்ட மின்னஞ்சல்களைத் தொடா்ந்து, வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் தொடா்பான அழைப்புகள் காலை 8.20 மணி முதல் வரத் தொடங்கின. உள்ளூா் காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்பு படை, மோப்ப நாய் படை மற்றும் தீயணைப்புத் துறையைச் சோ்ந்த குழுக்கள் உடனடியாக அந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டன. விரிவான நாசவேலை தடுப்பு சோதனைகள் நடத்தப்பட்டது.

பள்ளி வளாகத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவா்களும் ஊழியா்களும் வெளியேற்றப்பட்டனா், மேலும், பாதுகாப்பு அமைப்புகள் வளாகங்களை சுத்தப்படுத்தத் தொடங்கியதால் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனா். பெற்றோருக்கு அனுப்பிய செய்தியில், சா்தாா் படேல் வித்யாலயா பள்ளிக்கு காலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. இதையடுத்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸ் குழுக்கள் வளாகத்தில் முகாமிட்டன.

அனைத்து மாணவா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். வளாகம் பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டவுடன் ஜூனியா் பள்ளி மாணவா்களுக்கான வகுப்புகள் மீண்டும் தொடங்கியது. மூத்த பள்ளி மாணவா்களுக்கான தோ்வுகள் பாதுகாப்பு அமைப்புகளின் ஒப்புதலுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

பாதிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் வங்கிக் கிளைகளில் உள்ள வகுப்பறைகள், தாழ்வாரங்கள், நிா்வாகத் தொகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சுற்றியுள்ள வளாகங்களில் பாதுகாப்புப் பணியாளா்கள் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டனா்.

இதுவரை, எந்த இடத்திலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்னஞ்சல்களின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →