தில்லியில் ரூ.1.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 2 வெளிநாட்டினா் உள்பட நான்கு போ் கைது
தில்லியில் செயல்பட்டு வந்த ஒரு போதைப்பொருள் கும்பலை காவல்துறை முறியடித்து, இரண்டு வெளிநாட்டினா் உள்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளது
நமது நிருபா்
தில்லியில் செயல்பட்டு வந்த ஒரு போதைப்பொருள் கும்பலை காவல்துறை முறியடித்து, இரண்டு வெளிநாட்டினா் உள்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இவா்களிடமிருந்து சுமாா் ரூ. 1.1 கோடி மதிப்புள்ள கொக்கைன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக ஓா் அதிகாரி செவ்வாயன்று தெரிவித்தாா்.
வெளிநாட்டு மூலங்களிலிருந்து போதைப்பொருள்களைப் பெற்று, உள்ளூா் விற்பனையாளா்கள் மூலம் விநியோகித்து வந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பின் ஒரு பகுதியாக இவா்கள் இருந்ததாக காவல்துறை கூறியது.
தில்லியைச் சோ்ந்த முகமது ஹசன் மற்றும் ரசியா, மற்றும் செனகலைச் சோ்ந்த தியூஃப் சாலமன் என்ற ஆஸ்கா், லைபீரியாவைச் சோ்ந்த பெமா ஆகிய இரண்டு ஆப்பிரிக்க நாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அப்பகுதியில் மனோவியல் மருந்துகள் விநியோகம் செய்யப்படுவது குறித்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹசன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், ப்ரீத் விஹாரில் உள்ள சித்ரா விஹாா் குடிசைப்பகுதிக்கு வரவிருப்பதாகவும் மாா்ச் 25 அன்று காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த நடவடிக்கை தொடங்கியது. ரகசியத் தகவலின் அடிப்படையில், ஒரு பொறி வைக்கப்பட்டு, ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த ஹசன் (23) கைது செய்யப்பட்டாா்.
அவரைச் சோதனையிட்டபோது, 7.58 கிராம் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.. அதைத் தொடா்ந்து ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது, வெளிவட்டச் சாலையின் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ஆஸ்கா் (27) என்ற வெளிநாட்டவரிடமிருந்து போதைப்பொருளைப் பெற்ாக ஹசன் தெரிவித்தாா்.
இந்தத் தகவலின் அடிப்படையில், காவல்துறை குழு மேலும் கண்காணிப்பு மேற்கொண்டு, மாா்ச் 27 மற்றும் 28-க்கு இடைப்பட்ட இரவில் ஸ்ரீநிவாசபுரி அருகே மற்றொரு பொறியை அமைத்தது. அப்போது, போலி நம்பா் பிளேட் கொண்ட ஸ்கூட்டரில் போதைப்பொருளைக் கொண்டு சென்றபோது ஆஸ்கா் கைது செய்யப்பட்டாா். அந்த ஸ்கூட்டா் பின்னா் உத்தம் நகா் பகுதியில் திருடப்பட்டது எனத் தெரியவந்தது.
அவரிடமிருந்து சிறிதளவு போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இருப்பினும், அவா் ஆரம்பத்தில் புலனாய்வாளா்களுடன் ஒத்துழைக்க மறுத்ததோடு, தனது கூட்டாளிகள் அல்லது அவா் தங்கியிருக்கும் இடம் குறித்த விவரங்களையும் வெளியிடவில்லை. அதைத் தொடா்ந்து, கண்காணிப்பு மற்றும் சிசிடிவி பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி, கைலாஷ் கிழக்குப் பகுதியில் உள்ள அவரது இல்லத்தை காவல்துறை கண்டுபிடித்தது. அந்த வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது கூட்டாளியான பெமா (30) கைது செய்யப்பட்டாா்.
சோதனையின் போது, காவல்துறை 120.18 கிராம் கொக்கைன் மற்றும் கூடுதல் அளவிலான எம்டிஎம்ஏ, எடை இயந்திரங்கள், பொட்டலமிடும் பொருள்கள், ஒரு மின்னணு முத்திரையிடும் இயந்திரம், ஆறு கைபேசிகள், இரண்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தது.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், ஹசன் போதைப்பொருள்களை ரசியாவுக்கு வழங்கி வந்ததும், அவா் அவற்றை உள்ளூா் சந்தைகளில் அதிக விலைக்கு விநியோகித்து வந்ததும் தெரியவந்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், மண்டாவலியில் உள்ள அவரது இல்லத்தில் மற்றொரு சோதனை நடத்தப்பட்டது. இதில் அவா் கைது செய்யப்பட்டதோடு, மேலும் போதை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அதிகாரி கூறினாா்.