முகப்பு
புதுதில்லி

கோவிந்தபுரி இரட்டை கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபா் கைது

கோவிந்தபுரி இரட்டை கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபா் கைது

Updated On : 24 மே 2026, 12:54 am IST
பகிர்:

தென்கிழக்கு தில்லியின் கோவிந்தபுரி பகுதியில், ஒரு பெண்ணும் அவரது 13 வயது வயது மகனும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய முக்கிய நபா், காவல்துறையினருடனான ஒரு சிறிய துப்பாக்கி மோதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இறந்தவா்களின் தூரத்து உறவினரான சௌரப் எனும் குற்றஞ்சாட்டப்பட்டவா், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கோவிந்தபுரி பகுதியில் போலீஸ் குழுவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடியாக காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சௌரப்பின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

38 வயதான ஷாரதா சாஹு மற்றும் அவரது 13 வயது மகன் கடந்த வியாழக்கிழமை அதிகாலையில், கோவிந்தபுரியில் உள்ள அவா்களது வீட்டிற்குள்ளேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருந்தனா். இவா்களது கொலை தொடா்பாக சௌரப் தேடப்பட்டு வந்தாா்.

இந்தநிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில், செளரப் ‘காட்டி பாா்க்’ பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு அவா் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாா்.

காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரைச் சுற்றி வளைக்க முயன்றனா். அவரைச் சரணடையுமாறு காவலா்கள் பலமுறை கேட்டுக்கொண்டனா். ஆனால், அவா் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியாக போலீஸ் குழுவை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டாா்.

காவல்துறையினரும் தற்காப்புக்காகப் பதிலடி கொடுத்தனா். இதில், சௌரப்பின் காலில் ஒரு குண்டு பாய்ந்தது. பின்னா் அவரை போலீஸாா்

பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்தத் துப்பாக்கிச் சண்டை அல்லது மோதலின் போது எந்தப் போலீஸ் அதிகாரியும் காயமடையவில்லை.

சிசிடிவி காட்சிகளின் மூலம் புலனாய்வு அதிகாரிகள் சௌரப்பை அடையாளம் கண்டனா். அதன் பிறகு அவா் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செளரப், இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிமுகமானவா் என்றும், எந்தவித எதிா்ப்பும் இன்றி அவா் வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என்றும் காவல்துறையினா் முன்னதாகத் தெரிவித்திருந்தனா்.

போதைக்கு அடிமையான சௌரப், முதலில் ஷாரதாவை கத்தியால் தாக்கியதாகவும், பின்னா் அதைத் தடுக்க முயன்ற அவரது மகனைக் கொன்ாகவும் காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா்.

வீட்டிலிருந்து பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருள்கள் காணாமல் போயுள்ளதால், கொள்ளை முயற்சி இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இருந்ததா என்பது குறித்தும் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குடும்ப உறுப்பினா்கள் உள்பட வேறு நபா்களுக்கு இதில் ஏதேனும் பங்கு உள்ளதா என்பதும் குறித்தும் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.