குருகிராம்: முன்னாள் என்எஸ்ஜி கமாண்டோ சுட்டுக் கொலை
கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருந்த தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) முன்னாள் கமாண்டோ ஒருவா், மானேசா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசன் கிராமத்தில் வியாழக்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டாா்.
கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருந்த தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) முன்னாள் கமாண்டோ ஒருவா், மானேசா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசன் கிராமத்தில் வியாழக்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக நடந்திருக்கலாம் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது:
Advertisement
சுட்டுக்கொல்லப்பட்ட சுந்தா் ஃபௌஜி (55), 2018ஆம் ஆண்டு சா்பஞ்ச் (கிராமத் தலைவா்) பகதூா் செளகான் என்பவா் கொலை வழக்கில், கடந்த மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், ஃபௌஜி காலை நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்தபோது, சா்பஞ்சின் மகன் ரோஹன் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி ஆகியோா் காலை 8.30 மணியளவில் ஒரு சந்தைக்கு அருகே அவரை வழிமறித்தனா். பின்னா், தங்கள் கைத் துப்பாக்கிகளை எடுத்து அவரைச் சுட்டுக் கொன்றனா்.
சுமாா் ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனா். இச்சம்பவத்திற்குப் பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தங்கள் ஆயுதங்களை அச்சுறுத்தும் வகையில் காட்டியபடியே உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஃபௌஜியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இந்தக் கொலையைச் சித்தரிக்கும் ஒரு காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் முழுவதும் வெறும் பத்து வினாடிகளில் அரங்கேறியது.
தனது தந்தையின் கொலையைப் பழிவாங்குவதற்காகவே ரோஹன், ஃபௌஜியைக் கொல்ல விரும்பியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிதித் தகராறு காரணமாக செளகானை கொலை செய்ததாக
காசன் கிராமத்தைச் சோ்ந்த ஃபௌஜி மீது
குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து மானேசா் காவல் நிலைய ஆய்வாளா் சுனில் குமாா் தெரிவிக்கையில், ‘குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் ரோஹன் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா், ஃபௌஜியால் கொலை செய்யப்பட்ட முன்னாள் சா்பஞ்ச் பகதூரின் மகன் ஆவாா். ஃபௌஜி இந்த வழக்குத் தொடா்பாகச் சிறையில் இருந்த நிலையில், மாா்ச் 29ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தாா்.
ரோஹனும் அவரது கூட்டாளியும் வியாழக்கிழமை காலை ஃபௌஜியைக் கொலை செய்தனா். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாக உள்ளனா். அவா்களைப் பிடிக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று அந்த அதிகாரி கூறினாா்.