முகப்பு
திருநெல்வேலி

கடையநல்லூர் வட்டாரத்தில் போதிய மழை இல்லை: நெல் சாகுபடி செய்யப்படாமல் கிடக்கும் பல நூறு ஏக்கர் நிலங்கள்

கடையநல்லூர்,டிச.29: கடையநல்லூர் வட்டாரப் பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் பல நூறு ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படாத நிலை நீடித்து வருகிறது. இதனால் நாற்றங்கால் அமைத்த விவசாயிகள் வேதனையடைந்

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:44 PM
பகிர்:

கடையநல்லூர்,டிச.29: கடையநல்லூர் வட்டாரப் பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் பல நூறு ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படாத நிலை நீடித்து வருகிறது. இதனால் நாற்றங்கால் அமைத்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

 கடந்த மாதத்தில் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக கன்னியாகுமரி. தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், சேதங்களும் ஏற்பட்டன. இதுபோல கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கருப்பாநதி அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் அணையிலிருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

 தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் கருப்பாநதி தண்ணீரை நம்பி நாற்றங்கால் பாவி, நெல் நடும் பணியைத் தீவிரப்படுத்தினர்.

 இதேபோல மானாவாரி குளங்களை (மழையை நம்பியுள்ள குளங்கள்) நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளும், தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் நாற்றங்கால்களை அமைத்தனர்.

 ஆனால் எதிர்பார்த்த வகையில் மழையில்லாத காரணத்தால் மானாவாரி குளங்கள் நிரம்பவில்லை. இதன்காரணமாக நெல் சாகுபடியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர். சில விவசாயிகள் மட்டும் கிண்ற்று தண்ணீரை நம்பி குறைந்த பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

 கடையநல்லூர் வட்டாரத்தைப் பொருத்தவரை கருப்பாநதி அணைக்கட்டின் கீழ் 72 குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ளன. மேலும் பொதுப்பணித் துறை பராமரிப்பின் கீழ் 3 மானாவாரி குளங்களும் உள்ளன.

 இந்தக் குளங்கள் அனைத்தும் முழுவதும் நிரம்பினால்தான் இதன் கீழுள்ள சுமார் 9515 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்களில் நெல் சாகுபடி செய்ய இயலும். கடந்த மாதத்தில் பெய்த மழையின் காரணமாக 72 குளங்களில் புதுக்குளம், சின்னக்காரன் சீதப்பேரி, பெரியகாரன் சீதப்பேரி, கடம்பன்குளம் உள்ளிட்ட 10 குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 இதனால் இதன் கீழுள்ள சில நூறு ஏக்கர் பரப்பில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுளளது. மேலும் கடையநல்லூர் வட்டாரத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பில் 700 கிணறுகள் மூலமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

 மீதியுள்ள குளங்களுக்கு கருப்பாநதி அணையிலிருந்து சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும், அதன்மூலம் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 ஆனால், கடையநல்லூர் ஒன்றியத்தின் பராமரிப்பிலுள்ள 15 குளங்கள் மற்றும் பொதுப்பணித் துறை பராமரிப்பிலுள்ள 3 குளங்கள் போன்றவை மானாவாரி குளங்களாகும். இவை இந்த மழையில் நிரம்பாத காரணத்தால் சில ஆயிரம் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படாத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

 இது குறித்து கடையநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) முருகையா கூறியதாவது:

 கடையநல்லூர் வட்டாரத்தில் சுமார் 3600 ஹெக்டேர் நிலங்கள் வளமான நிலங்களாகும். இதில் சுமார் 2300 ஹெக்டேர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு விட்டது. மானாவாரி குளங்கள் நிரம்பாத காரணத்தால் எஞ்சியுள்ள 1300 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படவில்லை என்றார்.

 பொதுவாகவே, கருப்பாநதி அணைக்கட்டு நீர் முழுமையான விவசாயத்துக்கு போதுமானதாக இல்லை எனவும், கூடுதல் தேவைக்கு மட்டுமே பயன்படுவதாகவும், கிணற்று நீரையோ, மழை நீரையோ நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலையுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மழையை நம்பி நாற்றங்கால்களை அமைத்த விவசாயிகள், மானாவாரி குளங்கள் நிரம்பாததால் நெல் சாகுபடி செய்ய இயலவில்லை. எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.