தென்காசி, மே 28: "தென்னகத்தின் ஸ்பா' என அழைக்கப்படும் குற்றாலத்தில், சிறப்பு நிலை பேரூராட்சிக்குச் சொந்தமான தங்கும் விடுதிகள் சீரமைக்கப்படவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
பேரூராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் தங்கும் விடுதிகளைச் சீரமைப்பதன் மூலம், வருவாயைப் பெருக்குவதுடன் சுற்றுலாப் பயணிகளும் பயன்பெறுவர்.
2009-ல் குற்றாலத்திற்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20 லட்சம் என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்திலிருந்து மட்டுமன்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட தங்கும் விடுதிகள் முதல் சிறிய தங்கும் விடுதிகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன.
இது தவிர, குற்றாலம் ராமாலயம் பகுதியில் வீடுகளிலும் விடுதி போன்று அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஆண்டுதோறும் புதிதாக தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆ னால், குற்றாலம் சிறப்பு நிலைப் பேரூராட்சிக்குச் சொந்தமான விடுதிகள் பராமரிப்பின்றி வருவாய் இழப்புக்குள்ளாகின்றன.
குற்றாலம் சிறப்பு நிலைப் பேரூராட்சிக்குச் சொந்தமாக பேரருவி பகுதியில் 38 சிற்றில்களும் (காட்டேஜ்), தென்காசி சாலையில், தங்கும் விடுதியில் சிற்றில்கள் மற்றும் தங்கும் விடுதிகள் 15-ம், பஸ் நிலையத்தில் 7 தங்கும் விடுதிகளும், "மல்லிகை' தங்கும் விடுதியில் 20 அறைகளும், "சத்திரம்' தங்கும் விடுதியில் 21 அறைகளும், "அருவி' இல்லத்தில் யாத்திரீகர்கள் தங்கும் 8 ஹால்களும், "ரோஜா' தங்கும் விடுதியில் 24 தங்கும் அறைகளும் உள்ளன.
இதுதவிர, செங்கோட்டை சாலை தங்கும் விடுதி தனியாருக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள தங்கும் விடுதிகளில் வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ. 50-ம், சிற்றில்களுக்கு ரூ. 100-ம், அதிகபட்சமாக, தங்கும் விடுதிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 250-ம், சிற்றில்களுக்கு ரூ. 450-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்ச கட்டணம் சீசனின் உச்சகட்ட காலமான ஜூலை 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் வரையிலும் வசூலிக்கப்படும். பிற காலங்களில் குறைந்த பட்ச கட்டணமே வசூலிக்கப்படும்.
ஆனால், இங்கு சில தங்கும் விடுதிகளைத் தவிர வேறு எந்த அறைகளிலும் பயணிகள் தங்க முடியாது. பராமரிப்பில்லாத பாதுகாப்பற்ற கட்டடங்கள், சுகாதாரமற்ற மெத்தைகள், தலையணைகள், அறைக்குள் செல்லவே முடியாத நிலையில் துர்நாற்றம் போன்ற காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து தங்குவதில்லை.
2008-09-ம் ஆண்டில், தங்கும் விடுதிகளின் மூலம் பேரூராட்சிக்கு கிடைத்த வருவாய் ரூ. 3.67 லட்சம் ஆகும். 2009-ல் மட்டும் கிடைத்த வருவாய் சுமார் ரூ. 6 லட்சமாகும்.
ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளிலும் தங்கும் விடுதிகளைப் பராமரிக்கவும், தாற்காலிகப் பணிகள் மேற்கொள்ளவும் செலவிடப்பட்ட தொகை ரூ. 31.06 லட்சம் ஆகும். இதுதவிர, மின்சாரக் கட்டணம், ஊழியர்களின் செலவினங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். வருவாய் குறைந்ததற்கு, இலவசமாக தங்கும் விடுதிகள் பயன்படுத்தப்படுவது, போதிய பராமரிப்பு இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் வருகையின்மை, தங்கும் விடுதிகளில் போதிய வசதிகள் ஏற்படுத்தாமைபோன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.
2008-ல், தென்காசி சாலை தங்கும் விடுதியை இடித்து புதிய கட்டடங்கள் கட்டவும், அனைத்து தங்கும் விடுதிகளிலும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ. 1.9 கோடி மதிப்பீட்டில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் தொடர்ந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளும் பாதிப்புறும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சேதமடைந்த கட்டடங்களைப் புதுப்பித்து, போதிய பணியாளர்களை நியமிப்பதன் மூலம் வருவாயைப் பெருக்க முடியும். மேலும், இதன்மூலம் குறைந்த வாடகையில் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த பலனைப் பெற முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.