ஆலங்குளத்தில் 30 ஆண்டுகளாக இயங்கிய கிளை அஞ்சலகம் திடீர் மூடல்
ஆலங்குளம், அக். 26: ஆலங்குளம் பழைய பஸ் நிலையப் பகுதியில் 30 ஆண்டுகளாக இயங்கிவந்த கிளை அஞ்சலகம் திங்கள்கிழமையுடன் பணிகள் நிறுத்தப்பட்டு, பிரதான சாலையில் உள்ள துணை அஞ்சலகத்துடன் இணைக்கப்பட்டதால், பொதும
ஆலங்குளம், அக். 26: ஆலங்குளம் பழைய பஸ் நிலையப் பகுதியில் 30 ஆண்டுகளாக இயங்கிவந்த கிளை அஞ்சலகம் திங்கள்கிழமையுடன் பணிகள் நிறுத்தப்பட்டு, பிரதான சாலையில் உள்ள துணை அஞ்சலகத்துடன் இணைக்கப்பட்டதால், பொதுமக்களுக்கு கிடைக்கும் அஞ்சலக சேவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆலங்குளம் பிரதான சாலையில் மேற்குப் பகுதியில் துணை அஞ்சலகம் அமைந்துள்ளது.
இதன்கீழ் ஆண்டிபட்டி, ஐந்தாங்கட்டளை,புதுப்பட்டி, மருதம்புத்தூர், காளத்திமடம், குத்தப்பாஞ்சான், மாறாந்தை, புதூர், ஆலங்குளம் பழைய பஸ் நிலையப் பகுதி ஆகிய கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டுவந்தன.
ஆலங்குளம் கிளை அஞ்சலகம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் காலை 9.45 முதல் பிற்பகல் 1.45 மணிவரை செயல்பட்டது.
இங்கு சேமிப்புக் கணக்கு, ஆர்.டி. கணக்கு, தொலைபேசிக் கட்டணம் செலுத்துதல், பதிவஞ்சல், அஞ்சல்தலை, அஞ்சல்உறை விற்பனை உள்ளிட்ட சேவை கிடைத்து வந்தது. அஞ்சல் பட்டுவாடா மட்டும் துணை அஞ்சலகம் செய்துவந்தது.
கிளை அலுவலக சேவையால், மாணவர்கள், கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 10 வார்டு பொதுமக்கள், அருகேயுள்ள உள்ள கிராம மக்கள் சேமிப்புக் கணக்குகள் உள்ளிட்ட அஞ்சலக சேவையைப் பயன்படுத்திவந்தனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு கிளை அலுவலகத் தொடக்க நேரமான காலை 9.45 என்பது முற்பகல் 10.45 முதல் பிற்பகல் 1.45 மணிவரை என மாற்றப்பட்டது. மேலும் எவ்வித முன்னறிவிப்புமின்றி திங்கள்கிழமையுடன் அலுவலகப் பணிகள் நிறுத்தப்பட்டன. இங்கு பணிபுரிந்த பணியாளரும் வேறு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
அலுவலகக் கதவில் "தாற்காலிகமாக இந்த அலுவலகம், துணை அஞ்சலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது' என ஒரு காகிதத்தில் மட்டும் எழுதி ஒட்டிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அஞ்சலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு கி.மீ. தொலைவுக்குள் கிளை அலுவலகம் இருக்க அனுமதி இல்லை என்ற விதிப்படியும், மேலும் இங்கு போதிய பணப் பரிமாற்றங்கள் இல்லை என்பதாலும் மூடப்படுவதாகவும், இங்கு கணக்கு வைத்துள்ளோர் செவ்வாய்க்கிழமைமுதல் பிரதான சாலையில் உள்ள துணை அஞ்சலகத்தில் வரவு-செலவு செய்து கொள்ளலாம் என்றார்.
ஏற்கெனவே துணை அஞ்சலகத்தின் கீழ், 9 கிளை அஞ்சலகங்கள் செயல்படுவதால் அங்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது.
போதிய பணியாளர்கள் இல்லை. ஒரு போஸ்ட் மாஸ்டர், 2 கிளார்க்குகளும், ஒரு முழுநேர அஞ்சல்காரர், ஒரு பகுதிநேர அஞ்சல்காரர் ஆகியோரை மட்டுமே வைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் பொதுமக்களுக்கு அஞ்சலக சேவையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், துணை அஞ்சலகம் காலை 7 முதல் முற்பகல் 11 மணிவரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணிவரையும் மட்டுமே செயல்படுகிறது.
இடைப்பட்ட நேரத்தில் வெளியூரில் இருந்து வருவோர், மாணவ, மாணவிகள் கிளை அலுவலகத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது அந்த அலுவலகம் நிறுத்தப்பட்டு விட்டதால் கூடுதல் பாதிப்பு ஏற்படும்.
எனவே, நிறுத்தப்பட்ட கிளை அலுவலகத்தை மீண்டும் செயல்படுத்த, கோவில்பட்டி கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆலங்குளம் துணை அஞ்சல் நிலையத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பகுதிநேர அஞ்சல்காரர் உள்பட
இருவர் மட்டுமே பணி செய்து வருகின்றனர்.
ஆலங்குளம் பகுதி விரிவடைந்து வருவதால், அலுவலகங்கள், வங்கிகள் பெருக்கம், ஓய்வூதியர்கள் அதிகரிப்பு காரணமாக தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான அஞ்சல்கள் பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளது.
இருவர் மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்படும். எனவே கூடுதல் அஞ்சல்காரர்களையும் நியமிக்க வேண்டும்.
போராட்டம் அறிவிப்பு :
இது குறித்து நகர காங்கிரஸ் தலைவர் கே.எஸ். தங்கசெல்வம் கூறியதாவது:
இந்த அலுவலகத்தை மூடியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இக் கிளை அலுவலகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.
மேலும், துணை அஞ்சல் நிலையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதுடன், காலை 7 முதல் மாலை 5 மணிவரை தொடர்ந்து இயங்கச் செய்ய வேண்டும். பணி நேரத்தையும், எந்த கவுன்டரில் எந்த சேவை வழங்கப்படும் என்பதையும் தெளிவாக எழுத அஞ்சல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எம். விஷ்ணுநாடார் கூறியது: ஆலங்குளம் கிளை அஞ்சலகம், இருக்கும் இடம் குறுகிய பகுதியாகவும், அது இருக்கும் இடம் மற்றும் சேவை குறித்து வெளியில் அதிகம் தெரிகிற அளவில் அஞ்சல் துறை எதுவும் செய்யாததும்தான் பணப் பரிமாற்றம் குறையக் காரணம்.
மாறாக, பிரதான சாலையில் தரதளத்தில் சரியான அமைப்புடன் நிறுவப்பட்டால் பணப் பரிமாற்றங்கள் அதிகளவில் இருக்கும். இதற்கு அஞ்சல் துறை முயல வேண்டும் என்றார் அவர்.