தென்காசி,ஏப்.23:÷தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு அகல ரயில்பாதை திட்டப் பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் முழுமையடையாததால் பயணிகள் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர்.
÷தென்காசி,பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் வசித்து,திருநெல்வேலி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர்களுக்கும், இதே பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவ,மாணவிகள் ஆழ்வார்குறிச்சி,அம்பாசமுத்திரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கும் சென்றுவர தென்காசி-திருநெல்வேலி ரயில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
÷இந்நிலையில், செங்கோட்டை-திருநெல்வேலி பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக தென்காசி-செங்கோட்டை வரையிலான 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.
÷ தென்காசி-திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வரையிலான 73 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை பணிகள் மேற்கொள்வதற்காக 2008-ம் ஆண்டு டிச.31-ம் தேதியுடன் மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன.
÷தென்காசி - திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வரையிலான அகல ரயில் பாதை திட்டப் பணிகளுக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
÷இந்த வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள் உள்ளிட்ட 173 பாலங்களை மேம்படுத்தவும், அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
÷மேலும் பாவூர்சத்திரம், கீழகடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி உள்ளிட்ட ரயில்நிலையக் கட்டடங்களைப் புதுப்பிக்கும் பணியும், ரயில்நிலைய மேடைகள் உயர்த்தப்பட்டு நீட்டிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.
÷ரயில்நிலைய கட்டடப் பணிகளும், நடைமேடை சீரமைப்புப் பணிகளும் இப்போது நடைபெற்று வருகின்றன. தென்காசியிலிருந்து திருநெல்வேலி சந்திப்பு வரையிலான மீட்டர் கேஜ் தண்டவாளங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டு, அகல ரயில்பாதைக்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
÷இதில் சேரன்மகாதேவி முதல் திருநெல்வேலி சந்திப்பு வரையிலான பணிகள் முழுவதுமாக முடிவடைந்து வெள்ளோட்டமாக என்ஜின் இயக்கப்பட்டது. ஆனாலும் பிற பகுதிகளில் முழுமையாக தண்டவாளங்கள் அமைக்கும் பணி முடிவடையாததால் வெள்ளோட்டம் நடைபெறவில்லை.
÷திருநெல்வேலி-தென்காசி இடையே உள்ள பாலங்களை விரிவுபடுத்தும் பகுதிகளுக்கு கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்வதில் பிரச்னைகள் இருந்ததால் பாலத்தை விரிவுபடுத்தும் பணியில் தொடக்க காலத்தில் தாமதம் ஏற்பட்டது.
அதனையடுத்து தேவையான ஸ்லீப்பர் கட்டைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு காரணங்களால் இப் பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
÷2010-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தென்காசி-திருநெல்வேலி அகல ரயில்பாதை திட்டப் பணிகள் முடிவடைந்து,ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
÷இதுவரையிலும் இப் பணிகள் முடிவடையாததால் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த பயணிகள் மிகுந்த அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.÷ஆகவே ரயில்வே துறை விரைந்து இந்த பணிகளை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.