கோவில்பட்டி, ஏப். 26: கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தை இரவு நேரங்களில் புறக்கணிக்கும் பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டி புறவழிச் சாலையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து திருநெல்வேலி மற்றும் மதுரை மார்க்கங்களிலிருந்து புறப்படும் தொலைதூர பஸ்கள் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்துக்கு வருவதில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூகநல அமைப்புகள் கோரிக்கையைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை திருநெல்வேலி மற்றும் மதுரை பஸ் நிலையங்களிலிருந்து கோவில்பட்டி வழியாகச் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல உத்தரவிடப்பட்டது. ஆனால், ஒரு சில பஸ்கள் மட்டுமே கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றன. பெரும்பாலான பஸ்கள், பயணிகளை கோவில்பட்டி புறவழிச் சாலையிலுள்ள புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுச் செல்லும் நிலை தொடர்கிறது.
இதுகுறித்து கோவில்பட்டி வட்டாட்சியர் காளிமுத்து, திருநெல்வேலியிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கடிதம் அனுப்பினார்.
அந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்பிய நிர்வாகத்தினர், இரவு 8 மணி முதல் காலை 5.30 மணி வரை கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்துக்கு முறையாக பஸ்கள் வந்து செல்வதில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டுநர்-நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து 5-வது தூண் அமைப்பின் நிறுவன தலைவர் சங்கரலிங்கம் கூறியதாவது:
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்துக்கு இரவு நேரங்களிலும் பஸ்கள் வந்து செல்ல அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படியிருக்கையில் அண்ணா பஸ் நிலையத்தைப் புறக்கணிக்கும் ஓட்டுநர்களின் செயல் சரியானதல்ல.
மேலும், இப் பஸ் நிலையம் வழியாக பஸ்களை இயக்க மறுக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் குறித்து புகார் தெரிவித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்துக்கு இரவு நேரங்களில் வர மறுக்கும் அரசு பஸ்கள் குறித்த விவரத்தை (பஸ் எண், ஓட்டுநர், நடத்துநரின் பெயர், பஸ் புறப்பட்ட இடம், நேரம்) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம்.
5-வது தூண் அமைப்பை, 99425-49240 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தாலும், சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் செய்ய உதவுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.