நூலகங்களில் உறுப்பினர்களுக்கு யூனிக் எண்கள்: எந்த நூலகத்திலும் புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம்
கோவை, பிப்.10: தமிழகத்தில் உள்ள மாவட்ட நூலகங்களில் 30 லட்சம் உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைப்பு அடையாள எண்கள் (யூனிக் நம்பர்) வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள எந்த மாவட்ட நூலகத்தில் வேண்டுமான
கோவை, பிப்.10: தமிழகத்தில் உள்ள மாவட்ட நூலகங்களில் 30 லட்சம் உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைப்பு அடையாள எண்கள் (யூனிக் நம்பர்) வழங்கப்பட உள்ளன.
இதன்மூலம் தமிழகத்தில் உள்ள எந்த மாவட்ட நூலகத்தில் வேண்டுமானாலும் புத்தகங்களை எடுத்துப் படிக்க முடியும்; அதேபோல, புத்தகங்களை எந்த நூலகங்களிலும் திருப்பிச்செலுத்தும் வசதியும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நூலகங்களில் சுமார் 30 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். நூலகங்களும், அதில் உறுப்பினராக உள்ளவர்களின் பதிவுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சுமார் 30 லட்சம் உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைப்பு அடையாள எண்கள் (யூனிக்) வழங்கப்பட உள்ளன.
Advertisement
இந்த எண்களை வைத்துக்கொண்டு, தமிழகத்தில் உள்ள எந்த மாவட்ட நூலகங்களிலும் புத்தகங்களை எடுத்துப் படிக்க முடியும். இது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, பொது நூலகத் துறை இயக்குநர் அறிவொளி கூறியது:
முதல்கட்டமாக மாவட்ட தலைமையிடங்களில் உள்ள நூலகங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் எண்களை கணினிமயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அவர்களுக்கு ஒருங்கிணைப்பு அடையாள எண்கள் (யூனிக்) வழங்கப்பட உள்ளன.
இதன்மூலம் கோவையில் இருந்து ஆய்வுப் படிப்புக்குச் சென்னை செல்லும் மாணவர்கள் அங்குள்ள கன்னிமாரா நூலகத்தில் புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியும். முதல்கட்டமாக மாவட்ட நூலகங்களில் மட்டும் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. யூனிக் எண்களை மட்டும் காண்பித்தால் போதுமானது.
மாவட்ட நூலகங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் பெயர்கள், எண்கள் ஆகியவை கணினிமயமாக்கப்பட்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஏப்ரல் மாதத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதி மே மாதத்தில் நடைமுறைக்கு வரும்.
அதேபோல, ஒரு நூலகத்தில் எடுக்கும் புத்தகங்களை மற்ற மாவட்ட நூலகங்களில் பெறும் வசதியையும் ஏற்படுத்த உள்ளோம். மேலும், இணையவழியில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களையும் படிக்க முடியும். சுமார் 1 லட்சம் புத்தகங்களை கணினி மூலம் ஆவணப்படுத்தியுள்ளோம். தமிழில் மிகவும் அரிய புத்தகங்களையும் கணினி மூலம் ஆவணப்படுத்தியுள்ளோம்.
நாட்டில் உள்ள நூலகங்களை மேம்படுத்த ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை சார்பில் கணினிமயம் மற்றும் இணையவழி சேவைகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. இதன்படி 2009-2010 ஆம் ஆண்டில் ரூ.1.50 கோடியும், 2010-2011 ஆம் ஆண்டில் ரூ.1.25 கோடியும் நிதி பெறப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்ட நூலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக தாலுகா அளவில் உள்ள நூலகங்களும் கணினிமயமாக்கப்படும்
என்றார்.