பயனற்ற நிலையில் பஸ் நிழற்குடைகள்
கடையநல்லூர்,ஜன.10: பஸ் நிற்கும் இடத்துக்கும், பயணிகளுக்காக கட்டப்பட்டிருக்கும் பஸ் நிழற்குடைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதுபோல பல இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நிழ
கடையநல்லூர்,ஜன.10: பஸ் நிற்கும் இடத்துக்கும், பயணிகளுக்காக கட்டப்பட்டிருக்கும் பஸ் நிழற்குடைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதுபோல பல இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நிழற்குடைகள் அமைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
பொதுவாக பேரவை, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களின் கோரிக்கைகளை ஏற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பேரவை, மக்களவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிதிஒதுக்கி வருகின்றனர்.
இதில் கட்சித் தொண்டர்களின் பெரும்பாலான கோரிக்கைகளில் முக்கியமானது தங்கள் பகுதியில் பஸ் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பதுதான்.
சில பகுதிகளில் மட்டும்தான் பஸ் நிழற்குடைகள் அமைக்க சரியான இடம் கிடைக்கும் நிலையுள்ளது. கடையநல்லூரைப் பொறுத்தவரை மருத்துவமனை பஸ் நிறுத்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகள் பயணிகளுக்கு வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. இதனால் நிழற்குடைகள் பயணிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பஸ் நிழற்குடைகள் எதற்காக அமைக்கப்படுகின்றனவோ, அந்த நோக்கம் நிறைவேறுவதில்லை. ஏற்கெனவே பஸ்கள் நின்றுசெல்லும் இடத்தில், பஸ் நிழற்குடை அமைக்க இடமில்லாத நிலையில், கிடைத்த இடத்தில் நிழற்குடைகள் சில லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படுகின்றன.
நிழற்குடைகள் அமைக்கப்பட்ட பின்னர், காவல், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே உள்ள பஸ் நிறுத்தத்துக்குப் பதிலாக, புதிதாக நிழற்குடைகள் அமைக்கப்பட்ட இடத்தில் பஸ்களை நின்றுசெல்ல உத்தரவிடுவதில்லை.
இதனால் நிழற்குடைகள் கட்டப்பட்டு, திறக்கப்பட்ட பிறகும், அவை மாலைநேரப் பொழுதுபோக்கு மையங்களாக மாறி வருகின்றன. மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள பஸ் நிழற்குடைகள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன.
எனவே, இனியாவது பயணிகள் பயன்படுத்தும் வகையில் சரியான இடத்தில் பஸ் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.