தென்காசி, பிப். 28: தமிழகத்திலுள்ள பேரூராட்சிகளில் 150-க்கும் மேற்பட்ட செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாலும், பதவிஉயர்வு வழங்கப்படாததாலும் உள்ளாட்சித் துறையின் செயல்பாடுகள் முடங்கும் நிலையில் உள்ளன.
பேரூராட்சிகள் எனும் உள்ளாட்சி அமைப்பு வகையினை இந்தியாவிலேயே முதலில் உருவாக்கிய மாநிலம் தமிழகமாகும். நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு இடைப்பட்ட மாறுதலுக்குள்ளாகும் ஒருஅமைப்பாக உருவாக்கப்பட்டதுதான் பேரூராட்சியாகும்.
உள்ளாட்சி அமைப்புகளிலேயே தனித்துவமான நிர்வாக அதிகாரம் பெற்றவைகளாகவும், நிறைவானப் பணியாளர்களைக் கொண்டதாகவும், ஒருமுக செயல்பாடுகளைக் கொண்டதாகவும், ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக உள்ள ஒரு அமைப்பாகவும் உள்ளன.
பொதுமக்களுக்கு சேவை செய்வதில் தரம் வாய்ந்த அமைப்பாகவும், சிறப்பான கணக்கு மற்றும் தணிக்கைச் செயல்பாடுகளைக் கொண்டவையாகவும் விளங்குகின்றன. பேரூராட்சிகள் பொதுவாக கோட்ட தலைமையிடமாகவும், வட்ட தலைமையிடங்களாகவும்,சுற்றுலாத்தலங்களாகவும், புனிதத் தலங்களாகவும் வணிக மற்றும் தொழில் நகரங்களாகவும் உள்ளன.
இதனால் பொதுமக்களுடைய அன்றாட வாழ்க்கையின் தேவைகளை நிறைவு செய்யும் மையங்களாக பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் பேரூராட்சி அமைப்புகள் வருவாய்க்கு ஏற்றவகையில் நான்கு வகைகளாகத் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
ரூ.20 லட்சத்துக்கு மேல் வருமானம் உடைய பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சியாகவும், ரூ.16 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள பேரூராட்சிகள் தேர்வுநிலைப் பேரூராட்சிகளாகவும், ரூ.8 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள பேரூராட்சிகள் முதல்நிலை பேரூராட்சிகளாகவும், ரூ.4 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள பேரூராட்சிகள் இரண்டாம் நிலைப் பேரூராட்சிகள் என பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 13 சிறப்பு நிலைப் பேரூராட்சிகளும், 245 தேர்வு நிலைப் பேரூராட்சிகளும், 221 முதல்நிலைப் பேரூராட்சிகளும், 82 இரண்டாம் நிலைப் பேரூராட்சிகளும் இருந்தன. இப்போது புதிய நகராட்சி மற்றும் மாநகராட்சி உருவாக்கப்பட்ட போது அருகிலுள்ள பேரூராட்சிகள் அந்தந்த நகராட்சி அல்லது மாநகராட்சியுடன் இப்போது இணைக்கப்பட்டன.
பேரூராட்சிப் பகுதிகளில் சாலைகள், நடைமேடைகள் மற்றும் பாலங்கள், தெருவிளக்குகள், குடிநீர்வழங்கல், துப்புரவுப்பணி, மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைத்தல், மனைப்பிரிவு அங்கீகாரம், கட்டடங்களுக்கான வரைபடம் ஒப்புதல் அளித்தல் மற்றும் உரிமம் வழங்கல், வரிவிதிப்பு, பிறப்பு-இறப்பு சான்றிதழ் வழங்குதல், அபாயகரமானதும், ஆட்சேபகரமான தொழில்களுக்கு உரிமம் வழங்குதல், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களை அமைத்தல், மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது.
இதற்காக மத்திய, மாநில அரசு வழங்கும் நிதி, கடன்வழங்கும் நிறுவனங்கள், எம்.எல்.ஏ., எம்.பி., மேம்பாட்டு நிதியிலிருந்தும் ஒதுக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு உதவி இயக்குநர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் பணிபுரிகின்றனர். செயல் அலுவலர்கள் பணிமூப்பு அடிப்படையில் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால் தமிழகத்தில் சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள உதவி இயக்குநர்கள் மட்டுமே செயல் அலுவலர்களாக இருந்து பதவி உயர்வு பெற்றவர்களாவர்.
பிற உதவி இயக்குநர்கள் பிறதுறைகளிலிருந்து நியமிக்கப்படுகின்றனர். இதனால் அந்த துறை பற்றி முழுமையாக அவர்களுக்குத் தெரிவதில்லை. பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முழுமையாகச் செயல்படுத்த இயலவில்லை.
மேலும் தமிழகத்திலுள்ள 150-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. சில இடங்களில் ஒரு செயல் அலுவலர் இரண்டு முதல் மூன்று பேரூராட்சிகளில் கூடுதல் பொறுப்பாகப் பணியாற்றும் அவல நிலை தொடர்கிறது.
இதனால் அவர் எந்தஒரு பேரூராட்சியிலும் தன்னுடைய பணியை முழுமையாகச் செயல்படுத்த முடிவதில்லை என்பதே உண்மை. இதனால் பொதுமக்கள் தங்களுடைய
பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சிகளில் பணிபுரிபவர்களுக்கு எந்த ஒரு பதவி உயர்வும் வழங்கப்படவில்லை.
இந்தத் துறைகளில் பணிபுரிபவர்களுடன் அதே காலகட்டத்தில் வேறு துறையில் பணியில் சேர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு முதல் மூன்று நிலைகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதனால் உள்ளாட்சித் துறையில் பணிபுரிந்து வருபவர்கள் வேண்டா வெறுப்புடன், கடும் அதிருப்தியில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழகத்திலுள்ள பல ஊராட்சிகள் மக்கள் தொகையிலும், வருவாயிலும் பேரூராட்சிகளுக்கு இணையாகவும், அதிகமாகவும் உள்ளன. ஆனாலும் இதுவரையிலும் எந்த அரசும்,அந்த ஊராட்சிகளைத் தரம் உயர்த்தி பேரூராட்சியாக வழிவகை செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
உள்ளாட்சித் துறையைக் கையில் வைத்திருக்கும் தமிழக துணைமுதல்வர், பேரூராட்சிகளில் பணிபுரிபவர்களுக்கு உரிய பதவி உயர்வும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், புதிய பேரூராட்சிகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே உள்ளாட்சித் துறையில் பணிபுரிபவர்களின் எதிர்பார்ப்பு. இல்லையெனில் தேர்தல் களத்தில் தங்களுடைய எதிர்ப்பை ஜனநாயக முறையில் பதிவு செய்யக் காத்திருக்கின்றனர் என்பதே உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.