திருநெல்வேலி, செப். 18: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ள திமுகவின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ளும் முனைப்பில் மதிமுக இருப்பது திருநெல்வேலி மாநாட்டில் பிரதிபலித்தது.
2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது உருவான அதிமுக - மதிமுக கூட்டணி 2011-ம் ஆண்டு வரை நீடித்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் தொடங்கிய இழுபறியால் அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது.
எந்தக் கூட்டணியிலும் இடம்பெற முடியாத நிலை என்ற இக்கட்டான சூழலில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாக மதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தேர்தல் முடிந்து 4 மாத அமைதிக்குப் பிறகு, அண்ணா பிறந்த நாளையொட்டி திருநெல்வேலியில் திறந்தவெளி மாநாட்டை செப்டம்பர் 15-ம் தேதி நடத்தினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டல மாநாடு என்றே அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டு மேடைக்கு வந்த கட்சியின் பொதுச் செயலர் வைகோ கூட்டத்தைப் பார்த்து பூரிப்படைந்தார். திருநெல்வேலி மாநாடு மதிமுகவுக்கு திருப்புமுனையாக அமையும் என்றும் பல முக்கிய முடிவுகள் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் கடந்த ஒரு மாதமாக வைகோ கூறி வந்ததால் தொண்டர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணு மின் நிலையம், அரசின் இலவசத் திட்டங்கள், அரசு கேபிள் டிவி, ஸ்டெர்லைட் ஆலை என மக்கள் பிரச்னை தொடர்பான பல விஷயங்களைத் திரட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
""தோழமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தோம். இப்போதும் எங்களுக்கு பகைமை இல்லை.
உங்களை பகைத்துக் கொள்வது எங்களது நோக்கமல்ல'' என அதிமுக பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டார் நாஞ்சில் சம்பத்.
""இலங்கைப் பிரச்னையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வரை முதலில் பாராட்டியவர் வைகோ. தமிழகத்தில் நாகரிக அரசியல் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலை நம்பிக்கையோடு களம் காணுவோம்; புதிய சக்தியாக எழுவோம்'' என்றார் நாஞ்சில் சம்பத். அனைத்து உள்ளாட்சிப் பதவிகளுக்கும் மதிமுக நிர்வாகிகள் போட்டியிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து பேசிய வைகோ, மறைமுகமாக சில கருத்துகளைத் தெரிவிக்கத் தவறவில்லை. குறிப்பாக, அதிமுக, திமுக என எந்தக் கட்சியையும் தாக்கிப் பேசுவதை வைகோ தவிர்த்தார்.
"அதிமுகவும், திமுகவும் எதைத் தவற விட்டாலும் அதைச் செய்ய மதிமுக என்ற திராவிட இயக்கம் மீதமிருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதிமுக விரைவில் ஆட்சி பீடத்தில் அமரும்' என தனது பேச்சில் குறிப்பிட்டார் வைகோ.
சில வாரங்களில் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கும் நிலையில், திமுகவின் மாவட்டச் செயலர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் சிறைகளில் இருப்பதால் திமுக தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளதாக மதிமுக தலைமை கருதுகிறது.
சமச்சீர் கல்வி, பரமக்குடி கலவரம் உள்ளிட்ட அண்மைக்கால பிரச்னைகளில் அதிமுக அரசு மீதும் சில அதிருப்திகள் இருப்பதாகவும் மதிமுக தலைமை திடமாக நம்புகிறது.
திமுக தனித்துப் போட்டி என அறிவித்துவிட்டதால் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவையும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் அங்கும் குழப்பம் நீடித்து வருகிறது.
எனவே, தங்களது பிரசார வியூகங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்து விடலாம் என்பது மதிமுக கணக்கு.
திமுகவின் பலவீனம் மதிமுகவுக்கு கை கொடுக்குமா என்பது அடுத்த மாத இறுதியில்தான் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.