திருநெல்வேலி, செப். 26: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில் "கானா' என அழைக்கப்படும் திமுக மாவட்டச் செயலர் கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிமுகவில் இருந்த போது அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த வீ. கருப்பசாமி பாண்டியன், திமுகவுக்கு தாவிய சில மாதங்களிலேயே மாவட்டச் செயலர் பொறுப்பையும் பெற்றார்.
கருப்பசாமி பாண்டியன் வருகைக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்ட திமுகவில் நிர்வாகிகள் பல கோஷ்டிகளாகச் செயல்படத் தொடங்கினர். சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், மேயர் அ.லெ. சுப்பிரமணியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மாலைராஜா, முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை, டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் தனித்தனியே தங்களுக்கென்று கோஷ்டியை உருவாக்கிக் கொண்டனர்.
நிலப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மாவட்டச் செயலர் கருப்பசாமி பாண்டியன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய 6 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் குழுவை நியமித்து கட்சியின் பொதுச்செயலர் க. அன்பழகன் அறிவித்தார்.
சட்டப்பேரவை முன்னாள் தலைவர் இரா. ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை, டி.பி.எம். மைதீன்கான், மேயர் அ.லெ. சுப்பிரமணியன், பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் சுப. சீதாராமன், முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி பதவிக்கான வேட்பாளர்களை பொறுப்பாளர்கள் குழு தேர்வு செய்து கட்சியின் தலைமைக்கு அனுப்பிவைத்தது. மாவட்டச் செயலர் இல்லாத இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட பொறுப்பாளர் குழுவினர் தங்களது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொறுப்பாளர்கள் குழு தேர்வு செய்த வேட்பாளர்கள் பட்டியலை தன்னிடம் காண்பித்த பிறகே தலைமைக்கு அனுப்புவார்கள் என சிறையில் இருக்கும் கருப்பசாமி பாண்டியன் நினைத்தாராம். ஆனால், கடைசி வரை அவரிடம் வேட்பாளர் இறுதிப் பட்டியல் காண்பிக்கப்படவில்லையாம். இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் கருப்பசாமி பாண்டியன் வேதனைப்பட்டாராம்.
மேயர் வேட்பாளராக தனது ஆதரவாளரை நிறுத்த கருப்பசாமி பாண்டியன் நினைத்திருந்தாராம். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், சுப. சீதாராமன் தனது மகள் அமுதாவுக்கு "சீட்' பெற்றுக் கொடுத்துவிட்டார்.
இருப்பினும், சிறையில் இருந்தபடியே தனது ஆதரவாளர்கள் மூலம் தலைமைக்கு கடிதம் அனுப்பி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு நான்கு பேரை தேர்வு செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் கருப்பசாமி பாண்டியன்.
குறிப்பாக, 19, 20, 21, 22, 49, 55 ஆகிய வார்டுகளுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்குப் பதில் வேறு நபர்களை பொறுப்பாளர்கள் குழு தேர்வு செய்திருந்ததாம். இந்த தகவலை அறிந்த கருப்பசாமி பாண்டியன் தலைமைக்கு "பேக்ஸ்' அனுப்பி 4 பேருக்கு போட்டியிட வாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால், 27-வது வார்டுக்கு கருப்பசாமி பாண்டியன் பரிந்துரை செய்த வேட்பாளருக்குப் பதில் ஆவுடையப்பன் தேர்வு செய்தவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அமைதியாக செயல்பட்டு 20 மற்றும் 50-வது வார்டுகளில் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளார் மேயர் அ.லெ. சுப்பிரமணியன்.
இதேபோல, மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்விலும் கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர்களை பொறுப்பாளர்கள் குழு புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, களக்காடு பேரூராட்சித் தலைவராக இருக்கும் முத்துகிருஷ்ணனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு கருப்பசாமி பாண்டியன் தீவிர முயற்சி மேற்கொண்டாராம். ஆனால், ஆவுடையப்பனின் ஆதரவாளரான பி.சி. ராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஆலங்குளம், கீழப்பாவூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு தனது ஆதரவாளர்களை களம் இறக்க கருப்பசாமி பாண்டியன் தீவிர முயற்சி மேற்கொண்டாராம். ஆனால், அந்த இரண்டு பதவிகளுக்கான வேட்பாளர்களையும் தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை.
தான் சிறையில் இருக்கும் சமயத்தை எதிர்க்கட்சியினர் மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்கள் என நினைத்துக் கொண்டிருந்த கருப்பசாமி பாண்டியன், உள்கட்சியிலும் இத்தனை எதிர்ப்பு உள்ளதா என்று வேதனைபட்டாராம்.
வேட்பாளர்கள் அறிவிப்புக்குள்ளே இத்தனை பூசல்களா? இனி எப்படி தேர்தல் வேலைகள் நடக்கும் என்ற வழக்கமான ஏக்கத்தில் உள்ளனர் திமுக தொண்டர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.