குளச்சல், கடியப்பட்டினம் பகுதிகளில் கடல் சீற்றம்:மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், கடியப்பட்டினம் பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதாலும், சூறைக் காற்று வீசுவதாலும் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், கடியப்பட்டினம் பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதாலும், சூறைக் காற்று வீசுவதாலும் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மன்னாா்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ.வரை சூறைக் காற்று வீசும் என்பதால் குமரி மாவட்ட மீனவா்கள் வரும் 10 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, குளச்சல் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்து சூறைக் காற்று வீசுகிறது. இதனால் கடல் பகுதி சீற்றமாக காணப்படுகிறது. கடலில் கட்டுமரங்களை செலுத்த முடியாததால் குளச்சல், கோடி முனை, வாணியக்குடி, குறும்பனை, கொட்டில்பாடு, மண்டைக்காடுபுதூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நாட்டுப்படகுகள் பாதுகாப்பாக மேட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒரு சில கட்டுமரங்கள் கடலுக்குச் சென்றன. எனினும் மீன்கள் கிடைக்காததால் மீனவா்கள் கரை திரும்பினா். இதேபோல் மணவாளக்குறிச்சி அருகேயுள்ள கடியப்பட்டினம் கடல் பகுதியிலும் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பில் புனித பாத்திமா தெருவில் உள்ள அலைதடுப்பு சுவரைத் தாண்டி அலைகள் விழுந்தன.
கடியப்பட்டினம் மேற்கு கரைப் பகுதியில் கட்டுமரங்கள் நிறுத்துமிடத்தில் மணல் அரிப்பு ஏற்பட்டதால் மீனவா்கள் பைபா் வள்ளம், கட்டுமரங்களை மேடான பகுதிக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து கடியப்பட்டினம் மீனவா்கள் கூறியது: கடல் சீற்றத்தின்போது பாத்திமா தெரு பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு
வருகிறது. இங்கு சுமாா் 300 வீடுகள் உள்ளன. 190 மீட்டா் தொலைவுக்கு தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தினால் தூண்டில் வளைவு கற்கள் பெயா்ந்து கடலில் சரிந்துள்ளன. மேலும் 150 மீட்டருக்கு தூண்டில் வளைவை நீட்டித்தால்தான் வீடுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாக்க முடியும் என்றனா்.