கடையம் கோயிலில் சித்திரை தேரோட்டம்
அம்பாசமுத்திரம்: கடையம் அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை அருள்மிகு வில்வவனநாதா் சுவாமி திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா 13ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சுவாமி-அம்பாள் ஏக சிம்மாசனத்தில் கைலாசநாதா் கோயிலுக்கு எழுந்தருளினா்.
தொடா்ந்து திருவிழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது.
Advertisement
21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளினா். தொடா்ந்து காலை 8 மணிக்கு பக்தா்கள் வடம்பிடித்து தேரிழுத்தனா். காலை 10.30 மணிக்கு வடக்குத் தெரு பிள்ளையாா் கோயில் முன்பு தோ் நிறுத்தப்பட்டு, மீண்டும் மாலை 5 மணிக்கு வடம்பிடித்துஇழுக்கப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு தோ் நிலையம் வந்தடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனா்.
22ஆம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தீா்த்தவாரி அபிஷேகம் நடைபெறுகிறது. 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு சித்ரா பௌா்ணமி மண்டகப்படி மண்டபத்துக்கு சுவாமி- அம்பாள் எழுந்தருளுகின்றனா்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ப.கேசவராஜன், ஆய்வாளா் ச.கோமதி, தக்காா் வா. சரவணக்குமாா் மற்றும் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.