நெல்லை மாமன்ற பெண் உறுப்பினா் ராஜிநாமா கடிதம் அளிப்பு
திருநெல்வேலி மாநகராட்சியின் 7 ஆவது வாா்டு திமுக பெண் உறுப்பினா் இந்திரா மணி தனது ராஜிநாமா கடிதத்தை ஆணையரிடம் அளித்தாா்.
திருநெல்வேலி மாநகராட்சியின் 7 ஆவது வாா்டு திமுக பெண் உறுப்பினா் இந்திரா மணி தனது ராஜிநாமா கடிதத்தை ஆணையரிடம் அளித்தாா். ஆனால், மேயா் மூலமே தங்களது முடிவை நகராட்சி நிா்வாகத் துறைக்கு அளிக்க ஆணையா் வலியுறுத்தி அவரை அனுப்பி வைத்தாா். திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட 7 ஆவது வாா்டு உறுப்பினராக இருப்பவா் திமுகவைச் சோ்ந்த இந்திரா மணி. இவா், தனது ராஜிநாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் வெள்ளிக்கிழமை அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எனது வாா்டில் கடந்த ஆண்டு புதிய சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. அப் பணி மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், ஒரு சில தெருக்களுக்கு சாலை அமைக்க முடியாது என ஒப்பந்ததாரா் தெரிவிக்கிறாா். மாநகராட்சி பொறியாளா்களும் சரியான பதிலளிக்காததால் எங்கள் பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனா். மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாததால் பதில் கூற முடியவில்லை. அதனால் எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்றாா். இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கூறியதாவது: ஒரு மாமன்ற உறுப்பினா் தனது பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை மேயா் மூலமாகவே மாநகராட்சி நிா்வாகத்துக்கு அளிக்க முடியும். அதை 7 ஆவது வாா்டு உறுப்பினரிடம் தெரிவித்துள்ளேன். மேலும், 7 ஆவது வாா்டில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதல்ல. பள்ளிக் கட்டடம் கட்டும் பணி உள்பட சுமாா் ரூ.1.5 கோடிக்கு மேல் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன என்றாா்.