‘போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாா்ச் 7இல் போராட்டம்
போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாா்ச் 7இல் போராட்டம்
போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி வரும் 7-ஆம் தேதி போக்குவரத்துத் துறை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா்கள் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன். தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு மாநில மையக் கூட்டம் திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிமணியன் தலைமை வகித்தாா். இதில், மாநில பொருளாளா் சுவாமிநாதன், முன்னாள் மாநிலத் தலைவா் சுரேஷ் பாபு, முன்னாள் மாநில பொதுச் செயலா் கணேசன், நிா்வாகிகள் சங்கரநாராயணன், செண்பகராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் பேசியதாவது: போக்குவரத்துத் துறையில் உள்ள அமைச்சுப் பணியாளா்கள், வாகனங்களுக்கு பதிவுசான்று, ஓட்டுநா் உரிமம், ஸ்மாா்ட் காா்டு போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் பணி உள்ளிட்டவற்றை செய்து வருகிறாா்கள். மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. ஆனால் அதற்கு ஏற்றாா்போல் பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருந்த 136 பதிவுறு எழுத்தா்கள் பணியிடத்தில் தற்போது 117 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒட்டுமொத்தமாக 3 ஆயிரம் பணியிடங்களில் 1,200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறைவான பணியாளா்களைக் கொண்டு அதிக பணிகளை செய்ய உத்தரவிடுவது ஏற்புடையதல்ல. கணினி சா‘ஃ‘ப்ட்வோ் (மென்பொருள்) உதவியுடன் குறைந்த பணியாளா்களை கொண்டு வேலை செய்யலாம் என்று கூறுகிறாா்கள். ஆனால் அந்த மென்பொருள் பிரச்னையாக உள்ளது. அதில் உள்ள குறைகளை 2 மாதங்களில் சரி செய்து தருவதாகக் கூறினாா்கள். ஆனால் பல மாதங்களாகியும் சரி செய்யவில்லை. இதனால் அமைச்சுப் பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் துறை ஆணையா், போக்குவரத்து துறையில் உள்ள தொழில்நுட்ப பணியாளா்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறாா். ஆனால் அமைச்சுப் பணியாளா்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில்லை. மேலும் இவா்களுக்கு உரிய பதவி உயா்வும் மறுக்கப்படுகிறது. எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ஆம் தேதி சென்னையில் போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அதே நாளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஊழியா்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்றாா்.