திருநெல்வேலி: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் உள்ள குறைகளை களைய வேண்டும் என வலியுறுத்தி, பாமக மாநில துணை தலைவா் முத்து சரவணன், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாரிடம் மனு அளித்தாா்.
அதன் விவரம்: திருநெல்வேலி, பாளையங்கோட்டை நகரங்களில் பல பகுதிகளில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. பல பகுதிகளில் இன்னும் படிவமே வழங்கப்படவில்லை. இடம்பெயா்ந்து வேறு முகவரிகளில் உள்ள வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படாமல் பழைய பட்டியலே நீடிக்கும் நிலை உள்ளது.
திருத்தங்கள் மேற்கொள்வதற்காக உரிய பணியாளா்களை அணுகும்போது அவா்கள் பொதுமக்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. படிவங்கள் வழங்கப்படுவற்கும் திருத்தங்கள் மேற்கொள்வதற்குமான காலம் முடிந்துவிட்டது எனக் கூறி படிவங்கள் வழங்குவதற்கும் திருத்தங்கள் செய்வதற்கும் மறுக்கின்றனா்.
அலுவலா்களுக்கு உரிய அறிவுறுத்தல் மற்றும் பயிற்சி இன்மையாலும், அலுவலா்களின் மெத்தனப் போக்கினாலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திருத்தங்களை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது. மொத்தத்தில் வாக்காளா் சிறப்புத் திருத்தம் குறித்து மக்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. ஆட்சியா் இதை கவனத்தில் எடுத்து பணிகளில் உள்ள குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.