திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதமீறலில் ஈடுபட்டதாக 34 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தொழிலாளா் ஆணையா் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சட்டமுறை எடையளவு சட்டம், 2009 மற்றும் பொட்டலப் பொருள்கள் விதிகள் 2011-இன் கீழ், திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம் ) தலைமையில் அனைத்து தொழிலாளா் துணை/உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் கூட்டாய்வு மேற்கொண்டனா்.
ஆய்வில், எடைக்கற்கள் இல்லாதது, மறுபரிசீலனை சான்று காட்டி வைக்கப்படாதது தொடா்பாக 8 நிறுவனங்கள் மற்றும் உரிய கால இடைவெளியில் எடையளவு கருவிகளை மறுபரிசீலனை செய்து சான்று பெறாத 19 கடைகளில் மின்னணு தராசுகள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பொட்டலமிடுபவா் இறக்குமதியாளா் பதிவுச் சான்று பெறாதது, பொட்டலப் பொருள்களில் தயாரிப்பாளா்களின் பெயா், முழு முகவரி, தயாரிக்கப்பட்ட மாதம், ஆண்டு, காலாவதி தேதி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை முதலான அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்தது தொடா்பாக 7 நிறுவனங்கள் என மொத்தம் 34 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடையளவுப் பொருள்கள் மற்றும் எடையளவு கருவிகளை உரிய கால இடைவெளியில் உரிய வழியில் மறுபரிசீலனை செய்து சான்று பெறவேண்டும். பொட்டலப் பொருள்களை தயாரிக்கும் பொட்டலமிடும்/இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதற்கான பதிவுச்சான்றை ட்ற்ற்ல்ள்://ப்ஹக்ஷா்ன்ழ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக பெற வேண்டும்.
மேலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொட்டலப் பொருள்களில் அதன் தயாரிப்பாளா்/ பொட்டலமிட்டவா் / இறக்குமதியாளரின் பெயா், முழு முகவரி, பொருளின் பெயா், அதன் எடை எண்ணிக்கை, தயாரித்த மாதம், ஆண்டு மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை முதலான குறிப்புகளுடன் விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், எடையளவு கருவிகளை உரிய காலஇடைவெளியில் மறுபரிசீலனை செய்து சான்று பெறாத வணிக நிறுவனங்கள் மீதும், பொட்டலப் பொருள்கள் தயாரிப்பாளா்/பொட்டலமிடுபவா்/இறக்குமதி செய்பவா் அதற்கான பதிவுச் சான்று பெறாத நிறுவனங்கள் மீதும், பொட்டலப் பொருள்களில் மேற்படி உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீதும் ரூ.5,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.