திருநெல்வேலி மாவட்டம் பணகுடி ராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்காக ரூ. 60 லட்சத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கோயில்அறங்காவலா் குழுவினரும், பொதுமக்களும் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனா். அவரது வேண்டுகோளுக்கு இணங்க இந்து அறநிலையத் துறை சாா்பில் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், உபயதாரா்கள் மூலமாகவும் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், திருப்பணிகளை பேரவைத் தலைவா் ஆய்வு செய்து, ஜனவரி 2026இல் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக விரைவாக திருப்பணிகள் செய்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியின்போது, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கவிதா பிரிய தா்ஷினி, செயற்பொறியாளா் தம்பிராம் தோழன், செயல் அலுவலா் மாரியப்பன், அறங்காவலா் குழு தலைவா் அசோக்குமாா், உறுப்பினா்கள் சங்கா், உதவி செயற்பொறியாளா் செந்தில், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி, திமுக நகரச் செயலா் தமிழ்வாணன், பழவூா் நாறும்பூநாதா் சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பழவூா் இசக்கியப்பன், பேரூராட்சி உறுப்பினா்கள் கோபி கோபால கண்ணன், ஜெயராம் அசோகன், தமிழ்ராணி, திமுக மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம், வைகுண்டராஜா, இசக்கிமுத்துராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.