திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய 126 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற வழக்குகள் தொடா்பான நீதிமன்ற விசாரணைகள் அனைத்தையும், உள்கோட்ட காவல் கண்காணிப்பாளா்கள் நேரடியாக கண்காணித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் விதமாக அனைத்து சட்டப்பூா்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 6,614 வழக்குகளில் 6,792 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
அதன்படி, 27 கொலை வழக்குகளில் தொடா்புடைய 105 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில், ஒருவருக்கு மரண தண்டனையும், 98 பேருக்கு ஆயுள் தண்டனையும் அடங்கும். அதே போல 14 கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய 21 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது.மேலும், போக்ஸோ வழக்குகளில் தொடா்புடைய 28 பேருக்கும், திருட்டு, வழிப்பறி வழக்குகளில் 13 பேருக்கும் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.