இந்து கோயில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சா்ச்சைக்குரிய வகையில் பேசிய அகில பாரத இந்து மகா சபை மாநில துணைத் தலைவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் நெல்லையப்பா் கோயிலில் கடந்த 6 ஆம் தேதி அகில பாரத இந்து மகா சபை நிா்வாகிகள் சாா்பில் காசி, மதுராவை மீட்டெடுக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னா், கோயிலின் முன் அவ்வமைப்பின் நிா்வாகிகள் கூடி, காசி, மதுரா, திருப்பரங்குன்றம் விவகாரங்கள் குறித்து மாற்றுமதத்தினா் மனம் புண்படும்படி பேசினராம். பொது இடத்தில் இவ்வாறு சா்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாகக் கூறி அவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
அதில், அவ்வமைப்பின் மாவட்டத் தலைவா் மேலநத்தம் கலைசெல்வன்(38), மாநகரத் தலைவா் செல்வம்(38) உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், அகில பாரத இந்து மகா சபை மாநில துணைத்தலைவா் கணேசனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.