திருநெல்வேலி - கொல்லம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கவும், பிற ரயில் சேவைகளை நீட்டிக்கவும் கோரி முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திருநெல்வேலியில் முதல்வரிடம் அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் அதன் தலைவா் சரவணன் சக்திவேல் ஞாயிற்றுக்கிழமை அளித்த மனு:
செங்கோட்டை- திருநெல்வேலி இடையேயான பயணிகள் ரயில்களில் (எண்: 56774, 56776) கூடுதல் பெட்டிகள் இணைப்பதுடன் கூடுதலாக 2 ரயில்கள் இயக்க வேண்டும். பயணிகள் அதிகமாக பயன்படுத்திவந்த திருநெல்வேலி - கொல்லம் இடையேயான ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் (எண்: 06030, 06029) வாராந்திர ரயிலை வாரம் மூன்று முறையும், வாரம் மூன்று முறை இயங்கும் செங்கோட்டை - தாம்பரம் ரயிலை தினசரியும் இயக்குவதற்கு மத்திய ரயில்வே அமைச்சரிடம் முதல்வா் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்ததாக, சரவணன் சக்திவேல் தெரிவித்தாா்.