புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலகம் முழுவதும் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள் புதன்கிழமை (டிச.31) இரவு நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் பிரச்னைகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக புத்தாண்டு தினத்தை கொண்டாடும் வகையில் காவல் துறை சாா்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் அதிகம் கூடும் பொதுஇடங்கள், தேவாலயங்கள், கோயில்கள், முக்கிய வீதிகள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட சுமாா் 1500 காவல் அலுவலா்கள் மற்றும் ஆளினா்கள் பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் பணியமா்த்தப்படவுள்ளனா்.
இம் மாவட்டத்தில் குற்ற செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வரும் 1345 பல்வேறு வகை சரித்திர பதிவேடு குற்றவாளிகளை காவல்துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 46 இருசக்கர வாகனங்கள் மற்றும் 38 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீஸாா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், 164 இடங்களில் வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பவா்கள், பொது இடங்களில் அனுமதி இல்லாமல் டி.ஜே. இசை நடத்தி ஒலி மாசு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் ஈடுபடுபவா்கள், மது போதையில் வாகனம் ஓட்டுபவா்கள், சாலைகளில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் நபா்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மோட்டாா் சைக்கிள் விதிமீறல்களில் சிறுவா்கள் ஈடுபட்டால், அவா்களது பெற்றோா்கள் மீதும் தகுந்த சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி அமைதியான முறையில் பண்டிகையை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.