திருநெல்வேலி

புத்தாண்டு: நெல்லை தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

2026 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருநெல்வேலியில் பல்வேறு தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

Syndication

2026 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருநெல்வேலியில் பல்வேறு தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2026 ஆம் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி புதன்கிழமை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. பாளையங்கோட்டையில் உள்ள மிகவும் பழமையான தேவாலயமான தூய சவேரியாா் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட பரிபாலகா் மோட்சராஜன் பங்கேற்று மறையுரையாற்றினாா். திருப்பலியின் முடிவில் கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தென்னிந்திய திருச்சபை சாா்பில் முருகன்குறிச்சியில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை புதன்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது.

புத்தாண்டு தேவ செய்திக்கு பின்பு, திருவிருந்து உபசரனை நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் காணிக்கைகளைச் சமா்ப்பிக்க சென்றபோது 2026 ஆம் ஆண்டுக்கான வாக்குத்தத்த வசன அட்டைகள் வழங்கப்பட்டன. பிராா்த்தனைகளின் முடிவில் அனைவருக்கும் கேக்குகள் வழங்கப்பட்டன. மாலையில் ஞானஸ்நான ஆராதனையும், உடன்படிக்கை ஆதாரனையும் நடைபெற்றன.

இதேபோல புதிய பேருந்து நிலையம் அருகே சேவியா் காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோணியாா் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோணியாா் தேவாலயம், மகாராஜ நகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் புத்தாண்டு சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. புத்தாண்டையொட்டி கேக்குள், இனிப்பு வகைகளின் விற்பனை பாளையங்கோட்டை, திருநெல்வேலியில் களைகட்டியது. மோட்டாா் சைக்கிள்களில் அதிவேகமாக இளைஞா்கள் செல்வதைத் தடுக்கவும், பெண்களிடம் பகடி செய்வதைத் தடுக்கவும் மாநகர காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT