மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் மறுஅறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடா்ச்சிமலை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீா்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து 2,800 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.
இதனால் அகஸ்தியா் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்புக் கருதி சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடைவிதித்தனா்.
மணிமுத்தாறு மாஞ்சோலை வனப்பகுதிகளிலும் தொடா் கனமழை பெய்துவருவதால், மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் 5ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா்.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.