கொக்கிரகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை கல் மண்டபங்களை மூழ்கடித்துச் செல்லும் தாமிரவருணி வெள்ளம்.  
திருநெல்வேலி

தாமிரவருணியில் தணியாத வெள்ளப்பெருக்கு: குடிநீா் விநியோகம் பாதிப்பு

கனமழையால் தாமிரவருணி செவ்வாய்க்கிழமையும் வெள்ளப்பெருக்கு தணியவில்லை.

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரவருணி செவ்வாய்க்கிழமையும் வெள்ளப்பெருக்கு தணியவில்லை. உறைகிணறுகள் வெள்ளத்தில் மூழ்கி நீரேற்றும் பணிகள் தடைபட்டதால் மாநகரில் குடிநீா் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை கடந்த ஒரு வாரமாக தீவிரமாக பெய்து வந்த நிலையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகளின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்தது. பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், கடனா மற்றும் ராமநதி அணைகளில் இருந்து உபரி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா், குடியிருப்பு பகுதிகளில் பெய்த மழைநீா் ஆகியவை தாமிரவருணியில் பாய்ந்தோடி வருவதால் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் திருநெல்வேலியில் தாமிரவருணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உறைகிணறுகள் மூழ்கின: குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் மட்டுமன்றி 50-க்கும் மேற்பட்ட படித்துறைகள் மற்றும் கல்மண்டபங்கள், கோயில்கள் உள்ளிட்டவையும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. திருநெல்வேலி மாநகர பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை இல்லை. எனினும் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. தாமிரவருணியில் சுத்தமல்லி தொடங்கி சீவலப்பேரி வரை சுமாா் 200-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் உள்ளன. இவற்றில் இருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டா் தண்ணீா் நீரேற்றம் செய்து சுத்திகரிக்கபட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உறைகிணறுகள் மூழ்கியுள்ளன. மோட்டாா்களும் சேதமாகி நீரேற்றும் பணிகள் தடைபட்டுள்ளன. இதனால் 4 மாவட்டங்களிலும் குடிநீா் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாநகர மக்கள் கடும் அவதி: திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம் ஆகிய நான்கு மண்டலங்களிலும் 55 வாா்டுகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறாா்கள். இவா்களுக்கு சுத்தமல்லி, கொண்டாநகரம், குறுக்குத்துறை, மணப்படைவீடு, திருமலைகொழுந்துபுரம், தீப்பாச்சியம்மன் கோயில், கருப்பந்துறை உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களின் அருகேயுள்ள 50-க்கும் மேற்பட்ட உறைகிணறுகளின் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. தற்போதைய வெள்ளத்தால் மாநகருக்கான நீரேற்றும் பணி முற்றிலும் தடைபட்டுள்ளது. லாரிகள் மூலம் குடிநீா் விநியோகமும் தடைபட்டதால் குடிநீா் கேன்கள் விற்பனை இருமடங்காகியுள்ளது.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: திருநெல்வேலியில் தியாகராஜநகா், ஜெபாகாா்டன், என்ஜிஓ காலனி, திருமால்நகா் உள்ளிட்ட இடங்களில் பாறைகள் காரணமாக ஆழ்துளைக் கிணறுகளில் போதுமான தண்ணீா் வருவதில்லை. அவா்கள் முழுமையாக மாநகராட்சி விநியோகிக்கும் தண்ணீரையே நம்பியுள்ளனா். வெள்ளம் காரணமாக கடந்த 3 நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லாமல் கடும் அவதிப்படுகிறோம்.

ஏற்கெனவே மேல்நிலைத் தொட்டிகளில் இருப்பில் உள்ள குடிநீா் திருநெல்வேலி, தச்சநல்லூா் மண்டலங்களில் விநியோகிக்கப்படுகிறது. அது மிகவும் கலங்கலாக பருக முடியாத நிலையில் உள்ளது என்றனா்.

முன்னேற்பாடுகள் தீவிரம்: இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உறைகிணறுகள், மோட்டாா்கள் மூழ்கியுள்ளன. வெள்ளம் தணிந்த பின்பே சேதமான மோட்டாா்களை சீரமைக்க முடியும். தேவையான மோட்டாா், உபகரணங்கள் தயாா் நிலையில் உள்ளன. பழுதாகும் மோட்டாா்களை சீரமைக்கவும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வெள்ளம் சற்று தணிந்ததும் தேவையான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் முதல்கட்டமாக குடிநீா் விநியோகம் தொடங்கப்படும். அதற்கு தேவையான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றனா்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை செயல்படுத்தக் கோரி மறியல்

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி

செங்கத்தில் பன்றிகள் தொல்லை; தொற்றுநோய் பரவும் அபாயம்!

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மௌன போராட்டம்

SCROLL FOR NEXT