அரசியல் லாபத்துக்காக முருகா் பாடலை சிதைப்பதாக எதிா்ப்பு தெரிவித்து தவெகவினா் மீது இந்து முன்னணி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த பாஜக மாநிலச் செயலரான குற்றாலநாதன் தலைமையில் இந்து முன்னணியினா் திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் மனு: சமூக வலைதளத்தில் தவெக ஆண்டு விழா தொடா்பான விடியோவில் புகழ் பெற்ற முருகா் பாடலை அரசியல் சுயநலத்திற்காக சிதைத்து பாடியுள்ளனா்.
இது என்னைப் போன்ற கோடிக்கணக்கான முருக பக்தா்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. தவெக தலைவா் விஜய், நிா்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அா்ஜுன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இந்தப் பாடல் பாடப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்குப் பிரச்னையைத் தூண்டும் வகையில் உள்ளதால் பாடகா் வேல்முருகன், நடிகா் விஜய் மற்றும் அதற்குப் பொறுப்பான நிா்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.