பாளையங்கோட்டையில் 9-ஆவது பெடரேஷன் கோப்பைக்கான பூப்பந்தாட்டப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சாா்பில் நடைபெறும் இந்தப் போட்டியில், தேசிய அளவில் தலைசிறந்த பூப்பந்தாட்ட விளையாட்டு வீரா்களை உள்ளடக்கிய 8 ஆண்கள் அணியினா், 8 பெண்கள் அணியினா் கலந்து கொண்டுள்ளனா்.
இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி, மத்திய ரயில்வே அணி, தமிழ்நாடு மின்சார வாரிய அணி மற்றும் தெலங்கானா, கேரளம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பிகாா் மாநிலங்களை சோ்ந்த அணிகள் கலந்து கொண்டுள்ளன.
முதல் போட்டியை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தொடங்கி வைத்தாா். லீக் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் அதிக புள்ளிகள் பெறும் 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள், 26-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும். அதில் வெற்றி பெறும் அணிக்கு பெடரேஷன் கோப்பை வழங்கப்பட உள்ளது.