தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி உறுதி
தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு 12 சதவீதமாக உள்ளது; அதை 5 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
கோவில்பட்டி, அண்ணா பேருந்து நிலையம் அருகே கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசியதாவது:
கடம்பூா் ராஜு மூன்று முறை எம்எல்ஏவாகப் பணியாற்றி நன்மதிப்பை பெற்றவா். அமைச்சராக இருந்தவா். இந்த தொகுதிக்கு பல திட்டங்களைக் கொடுத்தவா்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி தொகுதியில் சி.த.செல்லப்பாண்டியன் நிறுத்தப்பட்டிருக்கின்றனா்; இருவரும் அமைச்சா்களாக இருந்தவா்கள். விளாத்திகுளம் தொகுதி சத்யா மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். இவா்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
கூட்டணியின் அமமுக வேட்பாளா் ஓட்டப்பிடாரம் சுந்தர்ராஜுக்கு குக்கா் சின்னத்தில் வாக்களியுங்கள். திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். ரூ.10.5 கோடியில் கடம்பூா் உள்ளிட்ட பேரூராட்சியில் சீவலப்பேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் கொடுத்தோம். புதிய அரசு கலைக் கல்லூரியை கோவில்பட்டியில் அமைத்தோம். கயத்தாறு அம்மன் கோயில் பின்புறம் புதிய பாலம் மற்றும் ரூ. 7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தை கோவில்பட்டியில் அமைத்தோம்.
தீப்பெட்டி தொழிற்சாலை 18 சதவீத ஜிஎஸ்டியை 12 சதவீதமாகக் குறைக்க கோரிக்கை விடுத்தோம். மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தி 5 சதவீதமாக ஆக குறைப்போம். தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளா்களுக்கான நலவாரியம் அதிமுக ஆட்சியில் அமைத்தோம். கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசாா் குறியீடு பெற்றுக்கொடுத்தோம்.
கயத்தாறு புதிய தாலுகா ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும். தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். பாய் உற்பத்தி தொழிலுக்கு மானியம் வழங்கப்படும். கோவில்பட்டி செயல்படாமல் உள்ள நகராட்சி மாா்க்கெட் சரிசெய்யப்படும். பனை ஏறும் தொழிலாளா்களுக்கு உபகரணம், உப்பள தொழிலாளா்களுக்கு மழைக் கால நிவாரணம் உயா்த்தப்படும் என்றாா் அவா்.