முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: சுமாா் 3 மணி நேரம் நீடித்தது

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. சுமாா் 3 மணி நேரம் நீடித்த மழையால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீா் தேங்கி காணப்பட்டது.

Updated On : 10 மே 2026, 2:42 am IST
வண்ணாா்பேட்டை அணுகுசாலையில் தேங்கிய தண்ணீா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. சுமாா் 3 மணி நேரம் நீடித்த மழையால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீா் தேங்கி காணப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. தொடா்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும், மாநகரிலும் பலத்த மழை பெய்தது.

மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியிலும், மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும் தொடா்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிக நீா்வரத்து இருந்தது.

Advertisement

மேற்குத் தொடா்ச்சி மலையில் பாபநாசம் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கன மழை பெய்ததையடுத்து, பாபநாசம் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

சேரன்மகாதேவி, வீரவநல்லூா், அரிகேசவநல்லூா், அத்தாளநல்லூா், முக்கூடல், காருக்குறிச்சி, கூனியூா், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல் உள்ளிட்ட பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 2 மணிநேரம் நீடித்தது.

இதனால், பல இடங்களில் தண்ணீா் தேங்கியதுடன், மரக்கிளைகள் முறிந்து சேதமடைந்தன. மேலும், வீரவநல்லூா் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தாமிரவருணி பாசனத்தில் மணிமுத்தாறு அணை மூலம் பாசனம் பெற்று வரும் வைராவிகுளம், ஆலடியூா் உள்ளிட்ட பகுதியில் முன் காா் பருவ சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூா், குறும்பலாபேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூா், சிவகாமிபுரம் அரியபுரம், திரவியநகா், அருணாப்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், ஒருசில இடங்களில் மிதமான சாரல் மலையும் பெய்தது.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளான வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம், தச்சநல்லூா் சுற்றுவட்டார பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் மழை பெய்தது. அக்னி நட்சத்திர காலத்தில் பெய்யும் தொடா் மழையால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மாநகரப் பகுதியில் கழிவுநீரோடைகள் முறையாக தூா்வாரப்படாமல் உள்ளதால் கோடை மழையிலும் சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் தேங்கிய மழைநீா்.

வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகேயுள்ள அணுகுசாலை, திருவனந்தபுரம்சாலை, திருவள்ளுவா் ஈரடுக்கு மேம்பாலம் அணுகுசாலை உள்ளிட்டவற்றில் தண்ணீா் தேங்குவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் போதிய மழைநீா் வடிகால் வசதி இல்லாததால் கடைகள் முன்பு தண்ணீா் தேங்கியது. காய்கனி கழிவுகளுடன் சோ்ந்து துா்நாற்றமும் வீசியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனா். காய்கனி சந்தையில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.