முகப்பு
கன்னியாகுமரி

ஒக்கி புயல் பாதிப்பு: 6005 ஹெக்டேரில் விவசாய நிலங்கள் பாதிப்பு-வேளாண்மை முதன்மைச் செயலர்

ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6005  ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலை மற்றும் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6005  ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலை மற்றும் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல இயக்குநர் மனோகரன் மற்றும் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவினர் குமரி மாவட்டம்  கல்படி, பத்மநாபபுரம்,  சித்திரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் விவசாயப் பாதிப்புகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
இலுப்பைக் கோணம் பகுதியில் பாதிக்கப்பட்ட ரப்பர் மரங்களை ஆய்வு செய்தனர். அப்பகுதியைச் சேர்ந்த ரப்பர் விவசாயிகள் மத்தியக் குழுவினரிடம் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவித்தனர்.
அப்போது, ரப்பர் மரங்கள் பாதிப்புக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும். குற்றாலம்,  பாபநாசம் போன்ற பகுதிகளில் இருந்து குரங்குகளை இங்கு விட்டு சென்று விடுவதால், அவை தென்னை,  மரச்சீனிகளை நாசம் செய்து விடுகின்றன. எனவே, நாங்கள் ஊடுபயிர்கள் பயிரிடுவதில்லை என விவசாயி ஜகபர் சாதிக் தெரிவித்தார்.
இதையடுத்து ககன்தீப் சிங் பேடி கூறியது: புயலால் பாதிக்கப்பட்ட தோட்டக்கலை மற்றும் விவசாயப் பயிர்கள் குறித்து பார்வையிட்டு வருகிறோம். இம்மாவட்டத்தில் 6005 ஹெக்டேரில் தோட்டக்கலை மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 1,600 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 1 ஹெக்டேர் விவசாய தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை இழப்பீடு பெற்றுத் தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
கணக்கெடுப்பில் பாதிக்கப்பட்டவர்கள் விடுபட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →