குலசேகரம் அருகே இந்தோனேஷியாவைச் சேர்ந்த இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் நாகர்கோவில் கோட்டாட்சியர் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
குலசேகரம் அருகே பொன்மனை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் நாயர் மகன் சுபாஷ் (31). இவர் இந்தோனேஷியா நாட்டிலுள்ள லம்புக் நகரில் ஒரு கொதிகலன் ஆலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பணி செய்தபோது, அந்நாட்டிலுள்ள பெர்தாமியா வர்தனியா (28) என்ற பெண்ணை காதலித்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இந்தோனேஷியா சென்ற தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், சுபாஷ் மட்டும் கடந்த ஜூலை மாதம் ஊர் திரும்பினார்.
இதையடுத்து பெர்தாமியாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்தார். இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் பொன்மனையில் உள்ள சுபாஷின் வீட்டில் பெர்தாமியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து பெர்தாமியாவின் சடலத்தை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி வியாழக்கிழமை சுபாஷ் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.
பெர்தாமியாவின் தற்கொலை தொடர்பாக இந்தியாவிலுள்ள இந்தோனேஷியா தூதரகம் வழியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் இந்திய வருகையைப் பொறுத்தே இந்த வழக்கின் அடுத்த நிலை குறித்து தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.