கதுவா சம்பவம்: நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் அஞ்சலி
கதுவா, குஜராத் மாநிலம் சூரத் உள்ளிட்ட இடங்களில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகளுக்கு, நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
கதுவா, குஜராத் மாநிலம் சூரத் உள்ளிட்ட இடங்களில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகளுக்கு, நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அதன் துணை பொதுமேலாளர் உஷா தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைச் செயலர் பி.இந்திரா அஞ்சலி உரையாற்றினார். சங்க நிர்வாகிகள் பி.ராஜூ, ஜார்ஜ், ஆறுமுகம், சின்னத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
களியக்காவிளையில்...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி திமுக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் களியக்காவிளை சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட திமுக செயலர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட நிர்வாகி எஸ்.ஆர். சினி உள்ளிட்டோர் பேசினர். திமுக நிர்வாகி ஷாஜகான், மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவுச் செயலர் மேக்கோடு சலீம், களியக்காவிளை வர்த்தக சங்கத் தலைவர் கிங்ஸ்லி மற்றும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர்.