கன்னியாகுமரி

சீரோ பாயின்ட் பகுதியில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்: மாற்று இடமும் நிதியும் கோரும் மக்கள்

DIN


குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையில் கூடுதல் மறுகால் மதகுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், சீரோ பாயின்ட் பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களுக்கு சரியான மாற்று இடம் வழங்காமல் வெளியேற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
பேச்சிப்பாறை அணையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்த அணையில் கூடுதல் மறுகால் மதகுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி மத்திய நீர்வள ஆதார அமைப்பின் பரிந்துரையின்படி இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கூடுதலாக 8 மறுகால் மதகுகள் அமைக்கப்படுகின்றன. தற்போது இப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
சீரோ பாயின்டில் 48 வீடுகள்: இந்த அணையின் சீரோ பாயின்ட் பகுதி, அணை கட்டப்பட்ட பிறகு காலியாக கிடந்ததால், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இப்பகுதியில் பலர் வீடு கட்டி வசிக்கத் தொடங்கினர். இதனை பொதுப்பணித் துறையினர் பொருட்படுத்தவில்லை. தற்போது இப்பகுதியில் கான்கிரீட் வீடுகள், கடைகள் உள்பட 48 வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அணையில் தற்போது கட்டப்பட்டு வரும் கூடுதல் மறுகால் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டால், வெளியேறும் தண்ணீர் சீரோ பாயின்ட் பகுதியில் வீடுகள் உள்ள பகுதி வழியாக வரும் நிலை உள்ளது. இதனால் இந்த வீடுகளில் வசிப்பவர்களை வெளியேற்றிவிட்டு, அந்த இடங்களை தண்ணீர் பாய்ந்து செல்லும் பகுதியாக மாற்ற பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டுளளனர். இதைத் தொடர்ந்து, வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறும்படி குடியிருப்பாளர்களிடம் பொதுப்பணித் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதில் வரும் 22ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டுமென்று கடைசி அறிவிப்பும் கொடுத்துள்ளனர்.
மாற்று இடம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்: சுமார் 75 ஆண்டுகளாக இப்பகுதியில் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்கள் தங்களுக்கு சரியான மாற்று இடமும், வீடுகளும் வழங்காததால் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதியில் வசிக்கும் ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சுசீலா கூறியதாவது: எங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வீடுகளைக் கட்டியுள்ளோம். எங்களுக்கு சரியான மாற்று இடமும், வீடு கட்டுவற்கான நிதியும் தாருங்கள் என்று அரசிடம் கேட்டு வருகிறோம். அரசு எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், பேச்சிப்பாறை சமத்துவபுரத்திலுள்ள வீடுகளின் பின்புறத்தில் தண்ணீர் தேங்கும் பகுதியில் நிலம் வழங்குவதாகக் கூறி சிலருக்கு பட்டாவும் வழங்கியுள்ளது. அந்த நிலத்தில் நாங்கள் வாழ முடியாது. எங்கள் பகுதியான கடையல் பேரூராட்சிப் பகுதியில் தனியார் ரப்பர் தோட்ட உரிமையாளர்களிடமிருக்கும் புறம்போக்கு நிலங்களை மீட்டு மாற்று இடமும், வீடு கட்ட நிதியும் வழங்க வேண்டும் என்றார்.
கடையல் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.ஆர். சேகர் கூறியதாவது: இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளர்கள். கடையல் பேரூராட்சிப் பகுதியிலுள்ள இம்மக்களுக்கு பேச்சிப்பாறை ஊராட்சி சமத்துவபுரம் அருகில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் நிலம் கொடுக்கும் திட்டத்தை ஏற்க முடியாது. கடையல் பேரூராட்சிப் பகுதியிலேயே நூற்றுக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் தனியார் ரப்பர் தோட்ட நிர்வாகங்களின் கையில் உள்ளது. இவற்றில் குறிப்பிட்ட பகுதியை மீட்டு இம்மக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் வீடு கட்ட தேவையான நிதியும் வழங்க வேண்டும்.
இது தொடர்பாக முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தலைமையில் மாவட்ட ஆட்சியரை ஏற்கெனவே சந்தித்து மனு கொடுத்துள்ளோம். வரும் 22 ஆம் தேதி வீடுகளை அகற்ற பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரை மீண்டும் சந்தித்து சரியான மாற்று இடம் கொடுக்கும் வரை மக்களை வீடுகளைவிட்டு வெளியேற்றக் கூடாது என்று கோரிக்கை வைக்கவுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT