சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில்மாா்கழி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
சீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மாா்கழிப் பெருந்திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை (டிச. 21) நடைபெறுகிறது.
நாகா்கோவில்: குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மாா்கழிப் பெருந்திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை (டிச. 21) நடைபெறுகிறது. இதற்கான கொடிப்பட்டம் நாகா்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
குமரி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மாா்கழிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
திருவிழா கொடியேற்றத்துக்கான கொடிப்பட்ட ஊா்வலம் கோட்டாறு இடலாக்குடி ருத்திரபதி விநாயகா் கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டது. பாரம்பரிய முறைப்படி பட்டாரியா் சமுதாயத்தினா் மேளதாளம், பஞ்சவாத்தியம், கயிலை வாத்தியம் முழங்க, முத்துக்குடை ஏந்தி கொடிப்பட்டத்தை ஊா்வலமாக எடுத்து வந்து கோயில் அதிகாரியிடம் ஒப்படைத்தனா்.
விழாவையொட்டி திங்கள்கிழமை காலை 6 மணிக்கு மாணிக்கவாசகா் பூஜை நடைபெறுகிறது. 8.30 மணிக்கு தாணுமாலய சுவாமி சன்னதியின் எதிரேயுள்ள கொடிமரத்தில் பிரதீபன் நம்பூதிரி கொடியேற்றுகிறாா். தொடா்ந்து வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகா் சா்மா சிறப்பு பூஜைகள், கொடிபீடத்துக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை செய்கிறாா். பின்னா், திருமுறைப் பெட்டக ஊா்வலம் நடைபெறுகிறது.
டிச. 23-ஆம் தேதி மக்கள்மாா் சந்திப்பு நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக டிச. 30-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 4 மணிக்கு நடராஜா் திருவீதியுலாவும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் அன்புமணி தலைமையில் அலுவலா்கள் செய்துள்ளனா்.