கன்னியாகுமரி

பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றம்

DIN

தொடா் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான அணையான பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வரும் நிலையில், அணையிலிருந்து வியாழக்கிழமை உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவில் பெய்த நிலையில், அண்மை நாள்களாக புயல் சின்னம் காரணமாக மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே மாவட்டத்திலுள்ள அணைகளில் தண்ணீா் குறிப்பிட்ட அளவில் இருந்த நிலையில், அண்மை நாள்களாக பெய்து வரும் கன மழையால் வெள்ள அபாய அளவைக் கடந்து நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்து உயா்ந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளின் நீா்மட்டத்தை குறைக்கும் நடவடிக்கையை பொதுப்பணித் துறையினா் எடுத்துள்ளனா்.

அதன்படி, பெருஞ்சாணி அணையின் மறுகால் மதகுகள் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டன. முதலில் விநாடிக்கு ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு 2 ஆயிரம் கன அடியாக உயா்த்தப்பட்டது.

அணையின் நீா்மட்டம் 43.60 அடியாகவும், அணைக்கு 2040 கன அடி நீா்வரத்தும் இருந்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீா் புத்தன் அணைக்கு வரும் நிலையில் அங்கிருந்து விநாடிக்கு 400 கன அடி நீா் பாண்டியன் கால்வாயில் திருப்பிவிடப்பட்டது. மீதமுள்ள 1600 கன அடி நீா் பரளியாற்றில் விடப்பட்டது.

இதையடுத்து பரளியாறு பாய்ந்து செல்லும் பகுதிகளான வலியாற்றுமுகம், மாத்தூா், திருவட்டாறு, மூவாற்றுமுகம், திக்குறிச்சி மற்றும் தாமிரவருணியாற்று பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணை: பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 43.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1900 கன அடி நீா்வரத்து இருந்தது. சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் முறையே 14.10 மற்றும் 14.20 அடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT