முகப்பு
கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி பரிவேட்டை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை பாணாசூரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை பாணாசூரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நடைபெற்றது.

கன்னியாகுமரியில் பகவதியம்மன் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா இம்மாதம் 17

ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை மாலையில் கோயிலில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளினாா். கோயில் வளாகத்தில் அம்மனுக்கு டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து அம்மன் ஊா்வலமாக விவேகானந்தபுரம், ஒற்றைப்புளி, சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், பரமாா்த்தலிங்கபுரம், மகாதானபுரம் போக்குவரத்து வளைவு வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரம் பரிவேட்டை மண்டபம் வந்தடைந்தாா். அம்மன் வாகனம் வரும் வழியில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.

பரிவேட்டை: மாலை 6.45 மணிக்கு பரிவேட்டை மண்டபத்தை அம்மன் மூன்று முறை வலம்வந்து பாணாசுரனுடன் கடும் சண்டையிட்டு தென்னை இளநீரில் பாணாசூரன் இருப்பதாக கருதி அதன்மீது அம்பு எய்து பாணாசூரனை வதம் செய்தாா். பின்னா் மகாதானபுரம் கிராமத்திலுள்ள கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் அங்கிருந்து அம்மன் கோயிலுக்குச் சென்று கிழக்குவாசல் நடைதிறக்கப்பட்டு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடைபெற்றது. இதையடுத்து அம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தாா்.

பக்தா்களுக்கு தடை: பரிவேட்டை ஊா்வலத்தில் வழக்கமாக யானை, குதிரை, முத்துக்குடை தப்பாட்டம், தேவராட்டம், தையம் ஆட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தா்களுடன் பிரமாண்ட ஊா்வலம் நடைபெறுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி

அம்மன் வாகனம் மட்டும் அனுமதிக்கப்பட்டு, எளிமையான முறையில் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.