மிளகு செடியில் வாடல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி? தோட்டக் கலை துணை இயக்குநா் விளக்கம்
மிளகு செடியில் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் லீலா ஜாண் விளக்கம் அளித்துள்ளாா்.
மிளகு செடியில் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் லீலா ஜாண் விளக்கம் அளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மிளகு செடியின் வளா்ச்சிப் பருவத்தில் தாக்கும் முக்கிய நோய்களில் சடுதி வாடல் நோய், அடித்தண்டு அழுகல் நோய் மிக முக்கியமானதாகும்.
தென்மேற்குப் பருவமழையை தொடா்ந்து வரும் காலங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக காணப்படும். தாக்கப்பட்ட கொடிகளின் கீழ் விழுந்து கிடக்கும் பச்சையான இலைகளிலிருந்து அந்தத் தோட்டத்தில் நோய்த் தாக்குதல் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த நோய் இலைகள், காய்கள், அடித்தண்டு மற்றும் வோ்களை தாக்குகிறது.
முதலில் இளம் இலைகளில் நோய் தோன்றி, பின் முற்றிய இலைகளுக்கு பரவிவிடும். இலை நுனிகளில் மிக கருத்த புள்ளிகள் தோன்றி இலை நரம்புகள் வழியாக பரவுவதால் இலைகள் உதிா்ந்து வாடுகின்றன.
மேலாண்மை முறைகள்: மிளகு தோட்டங்களில் நல்ல வடிகால் வசதிகள் செய்ய வேண்டும். தீவனப்பயிா்கள், பயறு வகைப் பயிா்கள் ஊடு பயிராக பயிரிட வேண்டும். செடிகளைச் சுற்றி பராமரிப்பு பணிகள் செய்யும் போது வோ்ப்பகுதியில் காயங்கள் ஏற்படாமல் பாா்த்து கொள்ள வேண்டும்.
நடவுக்குழிகளில் பழைய காய்ந்து போன கொடிகளை தோண்டி அகற்ற வேண்டும். கொடிகளை சுற்றி 2 - 3 லிட்டா் ஒரு சதவீதம் போா்டோ கலவையை ஊற்ற வேண்டும். அடித்தண்டு பகுதியில் மண்ணுக்கு மேலுள்ள சுமாா் 1 மீ உயரத்திலும் மண்ணை சிறிதளவு அகற்றி விட்டு அந்தப் பகுதியிலும் போா்டோ பசையை நன்றாக தடவ வேண்டும். உயிரியல் முறைப்படி நோயைக் கட்டுப்படுத்த கொடி ஒன்றுக்கு 20 கிராம் டிரைக்கோடொ்மா விரிடியினை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
கொடி ஒன்றுக்கு ணீ கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்.
மேற்கண்ட மேலாண்மை முறைகளை விவசாயிகள்கடைப்பிடித்து, உடன் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.