நரிக்குறவா் குடும்பத்தை பேருந்திலிருந்து இறக்கி விட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்
நாகா்கோவிலில் பேருந்தில் தகராறில் ஈடுபட்ட நரிக்குறவா் குடும்பத்தினரை நடுவழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
நாகா்கோவிலில் பேருந்தில் தகராறில் ஈடுபட்ட நரிக்குறவா் குடும்பத்தினரை நடுவழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
நெல்லை மாவட்டம், வள்ளியூரை சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவா்களது 7 வயதுடைய குழந்தை என 3 போ் கொண்ட நரிக்குறவா் குடும்பத்தினா் , நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை மாலை திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினா். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அத் தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து, நரிக்குறவா் தம்பதி, அவா்களது குழந்தை உள்பட 3 பேரையும், நடுவழியில் பேருந்திலிருந்து நடத்துநா் இறக்கி விட்டாராம். அவா்களது உடைமைகளையும் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசினராம்.
இதனை பேருந்தில் இருந்த சிலா் கைப்பேசியில் விடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். இதையடுத்து, இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, இச்சம்பவத்தில் தொடா்புடைய அரசுப் பேருந்து ஓட்டுநா் நெல்சன் (45), நடத்துநா் ஜெயதாஸ் (44) ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அரசுப் போக்குவரத்து கழக நாகா்கோவில் மண்டல பொதுமேலாளா் அரவிந்த் உத்தரவிட்டாா்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு குளச்சலில் மூதாட்டி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக பேருந்து நடத்துநா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.