முகப்பு
கன்னியாகுமரி

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பரிகார பூஜைகளை முறையாக செய்யவில்லை: ஜோதிட பிரசன்னத்தில் தகவல்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்திற்கு பிறகு செய்த பரிகார பூஜைகள் முறையாக செய்யப்படவில்லை என்று ஜோதிட பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்திற்கு பிறகு செய்த பரிகார பூஜைகள் முறையாக செய்யப்படவில்லை என்று ஜோதிட பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி நேரிட்ட தீ விபத்தில் கோயில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதைத் தொடா்ந்து, தமிழக அமைச்சா்கள் மற்றும் அறநிலையத் துறைஅதிகாரிகள் கோயிலுக்கு வந்து ஆய்வு செய்தனா். திருப்பணி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி வேலைகளுக்காக ரூ.1.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த நவம்பா் மாதம் 24 ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு திருப்பணியை தொடங்கி வைத்தாா்.

மண்டைக்காடு கோயிலில் பாா்க்கப்பட்ட தேவபிரசன்னம் மற்றும் வாஸ்தின் அடிப்படையில் கோயிலை விரிவாக்கம் செய்து திருப்பணிகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பணிகள் தொடங்கிய தினத்தில் இந்து இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து கோயில் தந்திரி தலைமையில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பரிகாரங்கள் முறையாக செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

உடனே இந்தப் பணிகளை கவனிக்க அனைத்து இந்து இயக்கங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து தந்திரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிவுரைபடி கோயில் தந்திரி சங்கரநாராயணரு தலைமையில் கோயிலில் இதுவரை செய்த பரிகாரங்கள் அம்மனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என திருவனந்தபுரம் ஜோதிடா் கண்ணன் நாயரை வைத்து ஜோதிட பிரசன்னம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கல்பக மங்கலம் மாத்தூா் மடம் சஜித் சங்கரநாராயணரு, இனி வரும் பரிகாரங்களை செய்ய தோ்வு செய்யப்பட்டாா்.

பின்னா் பாா்க்கப்பட்ட ஜோதிட பிரசன்னத்தில் கூறப்பட்டதாவது: அம்மனின் கோபம் தணியவில்லை. இப்போதும் கோயிலில் முறையாக பூஜைகள் நடக்கவில்லை. பணத்திற்காக எதுவும் செய்யும் நிலை உள்ளது. அம்மனுக்கு முன்பு இருக்கும் குருவிற்கு (சமாதிக்கு) பூஜைகள் முறையாக செய்யவில்லை. பரிகாரங்களும் செய்யவில்லை. அம்மனுக்கு ஏற்பட்ட தீக்காயத்திற்கு மருந்திடாமல் வெளியில் பரிகாரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை அம்மன் ஏற்கவில்லை. எனவே அம்மன் மீது ஏற்பட்ட காயங்களை ஆராய்ந்து சுத்தமான சந்தனத்தை அரைத்துப் பூச வேண்டும். இதை உடனடியாக செய்யாவிட்டால் ஊருக்கும், நாட்டிற்கும் பெரிய கெடுதல் ஏற்படும்.

கோயிலை விரிவாக்கம் செய்துதான் திருப்பணியை தொடங்க வேண்டும். கோயிலில் இருந்த உடைவாள் போன்ற பொருள்கள் திருட்டு போயுள்ளது. அம்மன் புற்றில் நல்லபாம்பு குடி கொண்டுள்ளது. இது வந்து செல்ல மேற்குப் பகுதியில் தனி வழி உள்ளது. இந்தக் கோயிலில் காலம் காலமாக ஆசார அனுஷ்டானங்களுடன் நடந்து வந்த பூஜைகளை முறைப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.

பிரசன்னம் பாா்க்கும் நிகழ்ச்சியில் கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகநயினாா், இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் மிசா சோமன், இந்து கோயில் கூட்டமைப்பு அமைப்பாளா் ஸ்ரீபதிராஜ், ஹைந்தவ சேவா சங்க பொதுச் செயலாளா் ரத்தினபாண்டியன், செயலாளா் முருகன், தேவி சேவா சங்க பொதுச் செயலாளா் சிவகுமாா், துணைத் தலைவா் சதீஷ்குமாா், பி.எம்.எஸ். மாநில பொறுப்பாளா் முருகேசன், பெரிய சக்கர தீவட்டி கமிட்டி தலைவா் முருகன் மற்றும் சாஸ்தா சேவா சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.