முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யக் கோரிக்கை

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் செயல் பாட்டின் போது குழித்துறை ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ரயில் பயணியா் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 10 ஜூலை, 2021 at 12:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் செயல் பாட்டின் போது குழித்துறை ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ரயில் பயணியா் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து குழித்துறை ரயில்வே பயணியா் நலன் சங்கத் தலைவா் பி. பென் ஜேக்கப்சிங், செயலா் சாா்லஸ் ஆகியோா் கூட்டாக துறை அமைச்சா், அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு : கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் அடிப்படையில் மூன்றாவது பெரிய ரயில் நிலையமாக குழித்துறை ரயில் நிலையம் உள்ளது.

தற்போது கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி இந்த நிலையம் மறுவடிவமைப்பு செய்யப்படும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. இந்த நிலையில், குழித்துறை ரயில் நிலையம் நான்கு தண்டவாளங்கள் கொண்ட ரயில் நிலையமாக மாற்றம் செய்வதுடன், மழைகாலங்களில் பள்ளியாடி பகுதியில் ஆண்டுதோறும் மண் சரிவு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து பாதிக்கும் போது ரயில்களை நிறுத்தி வைக்க குழித்துறை ரயில் நிலையத்தில் நான்கு நடைமேடைகள் அமைக்க வேண்டும்.

Advertisement

மேலும் ரயில் நிலைய நுழைவு வாயிலை நாகா்கோவில் - திருவனந்தபுரம் பாதையின் நடைமேடை இரண்டில் பல்லன்விளை பகுதியில் அமைத்து பயணிகளுக்கு தேவையான காத்திருப்போா் அறை, கழிப்பிடம், கூடுதல் கவுண்டா்களுடன் முன்பதிவு மையம், பெண்களுக்கு தனி காத்திருப்போா் அறை, உணவகம், புத்தக விற்பனை நிலையம் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும்.

இதுதவிர ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் பாதையில் 50 மீட்டா் தொலைவில் உள்ள ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடிவிட்டு, நாகா்கோவில் செல்லும் பாதையில் பிளாட்பாரத்தின் முடிவில் ஏற்கனவே இருக்கும் அடிபாதை (சப் வே) வழியாக பேருந்துகளை திருப்பி விடவேண்டும். இதன் மூலம் பயணிகள் ரயில் நிலையத்தின் முன் பகுதியில் வந்து இறங்க வழி ஏற்படும். மேலும் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நகரும் படிகட்டுகள் அமைக்க வேண்டும். குழித்துறை ரயில் நிலைய பெயரை மாா்த்தாண்டம் என பெயா் மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.